தினமலர் 09.10.2010
அங்கீகாரமற்ற லே–அவுட்டுக்கு எதிராக நடவடிக்கை : அமைக்கும்போதே தடுத்தது மாநகராட்சி
கோவை : விவசாய நிலத்தை அழித்து அங்கீகாரமற்ற லே–அவுட் அமைப்பதை, மாநகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்; முறைப்படி அங்கீகாரம் பெற உறுதியளித்ததால் திரும்பிச் சென்றனர்.
கோவை நகரிலுள்ள அங்கீகாரமற்ற லே–அவுட்களில் இருந்த மனையிடங்கள், 2006ல் அரசு அறிவித்த திட்டத்தில் வரன் முறைப்படுத்தப்பட்டு விட்டன. இருப்பினும், ஆண்டுதோறும் நகரிலுள்ள விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, குடியிருப்புகளாக மாற்றப்படுகின்றன. நில உபயோக மாற்றம், லே–அவுட் அங்கீகாரம் எதுவும் இல்லாமல் அமைக்கப்படுவதால், சாலைக்கான இடம், “ரிசர்வ் சைட்‘ எதுவுமே இருப்பதில்லை. இந்தப்பகுதியில் குடியேறுவோர், எதிர்காலத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு போராடும் நிலை ஏற்படும்.
கோவை உக்கடம் கழிவுநீர்ப் பண்ணைக்குப் பின்னால், இத்தகைய அங்கீகாரமற்ற லே–அவுட்கள் முளைத்தன.இவற்றைத் தடுப்பதில் மாநகராட்சி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக அமைக்கப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்குப் பின், விவசாய நிலத்தை அழித்து அங்கீகாரமற்ற லே–அவுட் அமைப்பதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் வந்தது. கோவை மாநகராட்சி தெற்கு மண்டல உதவி கமிஷனர் லட்சுமணன், உதவி நகரமைப்பு அலுவலர் ஜோதிலிங்கம், உதவிப் பொறியாளர் சுந்தர்ராஜன், அலுவலர்கள் அங்கு சென்றனர்.
அங்கு, விவசாய நிலங்கள் சமப்படுத்தப்பட்டு, மனையிடங்கள் பிரிக்கப்பட்டிருந்தன. புதிதாக ரோடு போடும் பணியும் நடந்து வந்தது. மனையிடங்களைப் பிரித்து, நடப்பட்டிருந்த கற்களை அகற்ற, மாநகராட்சி ஊழியர்கள் முயன்றபோது, இடத்தின் உரிமையாளர் மற்றும் பலர் அங்கு வந்து,வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து உக்கடம் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் முன்னிலையிலும், அவர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால், மாநகராட்சி ஊழியர்களால் எந்தப் பணியையும் செய்ய முடியவில்லை.
மாநகராட்சி அலுவலர்கள், “அங்கீகாரமற்ற லே–அவுட் அமைப்பதைத் தடுப்பது எங்கள் கடமை; அதைச் செய்ய விடுங்கள்‘ என, பதிலளித்தனர். நீண்ட நேர பேச்சுக்குப்பின், “ஆறு மாதத்தில் அங்கீகாரம் பெறுவோம்; அதுவரை எப்பணியையும் செய்ய மாட்டோம்‘ என்றனர். எழுத்துப்பூர்வமாக பெற்றுக் கொண்ட பின், மாநகராட்சி அலுவலர்கள் அங்கிருந்து திரும்பினர்.
இடத்தின் உரிமையாளர் இப்ராஹிம் கூறுகையில், “”இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எந்த லே–அவுட்டும் முறைப்படி அங்கீகாரம் பெற்றதில்லை; பல இடங்களில் அங்கீகாரமற்ற லே–அவுட் அமைக்கப்பட்டு, ஒரு சென்ட் 5 லட்சம், 6 லட்சம் என விற்கப்படுகிறது. இதைத் தடுக்காத அதிகாரிகள், 3.2 ஏக்கரில் அமைக்கப்படும் இந்த லே–அவுட்டை மட்டும் தடுக்க கவுன்சிலர் திருமுகம் தான் காரணம்,” என்றார்.
கவுன்சிலர் திருமுகத்திடம் கேட்டபோது, “”அங்கீகாரமற்ற லே–அவுட் எங்கே அமைத்தாலும் நான் அதை எதிர்ப்பேன். அங்கு அங்கீகாரமற்ற லே–அவுட் அமைப்பதோடு, அனுமதியின்றி ரோடு அமைக்கின்றனர். அந்த இடத்தில் நில உபயோக மாற்றமும் செய்யவில்லை. “”அங்கீகாரமற்ற லே–அவுட் அதிகரிப்பதால், எதிர்காலத்தில் மாநகராட்சிக்குதான் பிரச்னை; அதனால்தான், மாநகராட்சி நிர்வாகம் அதைத் தடுக்கிறது,” என்றார்.
அங்கீகாரமற்ற லே–அவுட்களைத் தடுப்பதில் வருவாய்த்துறை, உள்ளூர் திட்டக்குழுமம், மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் மாநகராட்சி நிர்வாகம் காட்டும் அக்கறையை மாவட்ட நிர்வாகம் காண்பிப்பதில்லை. அங்கீகாரமற்ற லே–அவுட் அமைவதைத் தடுக்க வேண்டிய முக்கிய பொறுப்பிலுள்ள உள்ளூர் திட் டக் குழுமத்துக்கு கலெக்டர்தான் தலைவராக உள்ளார்.