தினமலர் 04.05.2010
அனுமதியற்ற குடிநீர் இணைப்பு? அபராதம் இரு மடங்காக உயர்வு
கோவை: மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் அனுமதியற்ற குடிநீர் இணைப்பு வைத்திருப்போருக்கு இரு மடங்கு அபராதம் விதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அனுமதியற்ற வகையில் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், அடுக்குமாடி கட்டடங்கள், அலுவலகங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுவரை அனுமதியற்ற வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு 3,000 ரூபாயும், மற்ற இணைப்புகளுக்கு 5,000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது. ‘இது போதுமானதாக இல்லை‘ என்று உள்ளாட்சி நிர்வாகங்கள் கருத்து தெரிவித்தன. இதையடுத்து, அனுமதியற்ற குடிநீர் இணைப்புக்கு இரண்டு மடங்கு கட்டணம் விதிக்க, நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அனுமதியற்ற வீட்டு குடிநீர் இணைப்புக்கு 6,000 ரூபாயும், மற்ற குடிநீர் இணைப்புகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். உத்தரவு பெற்ற நாளிலிருந்து மூன்று மாதத்திற்குள் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளும், பேரூராட்சிகளும் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த உத்தரவின் நகல் மக்களின் பார்வைக்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளன.