தினத்தந்தி 09.12.2013
அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் அகற்றம் கலெக்டர் கருணாகரன் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை

நெல்லையில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட
விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டது. கலெக்டர் கருணாகரன் நேரில் பார்வையிட்டு
நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விளம்பர பேனர்கள்
நெல்லை மாநகரில் தொழில், வியாபாரத்தை
பெருக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் விளம்பர பேனர்களை வைத்து உள்ளனர்.
சாலையோரங்கள் மற்றும் பெரிய கட்டிடங்களின் மீதும், தனியார் கட்டிடங்களின்
காம்பவுண்டு சுவரையொட்டியும் இந்த விளம்பர பேனர்களை வைத்து உள்ளார்கள்.
இந்த பேனர்களை நிறுவுவதற்கு மாநகராட்சி
நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் நெல்லையில்
பெரும்பாலான பேனர்கள் அனுமதி பெறாமலும், குறைந்த அளவுக்கு அனுமதி பெற்று
விட்டு பெரிய அளவிலும் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
அகற்றப்பட்டன
இவ்வாறு அரசு அனுமதி இல்லாமல்
சாலையோரங்கள் மற்றும் இதர இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விளம்பரப்
பேனர்கள் மற்றும் விளம்பரங்களை அகற்றுமாறு நெல்லை மாவட்ட கலெக்டர்
மு.கருணாகரன் உத்தரவிட்டார். அதற்காக குறிப்பிட்ட நாட்கள் கால அவகாசமும்
அளிக்கப்பட்டது.
இதற்கிடையே அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டு
உள்ள விளம்பரப் பேனர்கள், தட்டி போர்டுகள் அகற்றும் பணி நேற்று நடைபெற்றது.
நெல்லை மாநகர எல்லைப்பகுதியான தாழையூத்து சோதனைச்சாவடியில் இருந்து
தச்சநல்லூர் ரவுண்டானா வரை மதுரை ரோட்டின் இருபுறங்களிலும் வைக்கப்பட்டு
இருந்த பிரமாண்ட விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன. இதே போல் தச்சநல்லூர்,
உடையார்பட்டி பகுதிகளிலும் விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன.
போலீஸ் பாதுகாப்பு
மாநகராட்சி ஆணையாளர் த.மோகன்
மேற்பார்வையில் உதவி செயற்பொறியாளர் சாமுவேல் செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை
உதவி கோட்டப் பொறியாளர் மெர்லின் கிறிஸ்டல், இளநிலைப் பொறியாளர்
கிருஷ்ணசாமி, சாலை ஆய்வாளர் முனியசாமி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இந்த
பணியில் ஈடுபட்டனர்.
பொக்லைன் இயந்திரம் கொண்டும், வெல்டிங்
இயந்திரம் கொண்டும் பேனருக்காக தரையில் நிறுவப்பட்டு இருந்த இரும்பு
தூண்கள் வெட்டி அகற்றப்பட்டன. இந்த பணியை ஏராளமான பொது மக்கள் கூடி நின்று
பார்த்தனர். இதையொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு
இருந்தது.
கலெக்டர் ஆய்வு
இந்த பணிகளை கலெக்டர் மு.கருணாகரன் நேரில்
சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தச்சநல்லூர் கரையிருப்பு பகுதியில்
பேனர்கள் அகற்றும் பணியை அவர் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம்
கூறியதாவது:–
தமிழக அரசு உத்தரவுப்படி அரசு அனுமதி
இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பேனர்கள் மற்றும் விளம்பரங்களை
அகற்றும் பணி மாநகராட்சி பகுதியில் தொடங்கப்பட்டு உள்ளது. விளம்பர பேனர்கள்
வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி பெற வேண்டும். மேலும், உள்ளாட்சி
அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை, போலீஸ் துறை ஆகிய துறைகளின் தடையின்மை
சான்றிதழ் பெற வேண்டும். அரசு விதிகளுக்கு மாறாக மாநகராட்சி பகுதியில் 251
விளம்பரப் பேனர்கள் வைக்கப்பட்டு இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
தொடர்ந்து நடக்கும்
ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பால்
பல்வேறு பகுதிகளில் விளம்பரப் பேனர்களை அதன் உரிமையாளர்களே அகற்றி
விட்டனர். விளம்பரப் பேனர்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும்.
அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பரப் பேனர்களும் அகற்றப்படும்.
இதுபோல் மாவட்டத்தின் பிறபகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள
விளம்பரப் பேனர்கள் முழுமையாக அகற்றப்படும். அதற்கான நடவடிக்கையில்
உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் மு.கருணாகரன் கூறினார்.