அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம்: ஒப்பந்த லாரிகளுக்கு குடிநீர் வாரியம் உத்தரவு
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகள் எதுவாக இருந்தாலும் அந்தப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று ஒப்பந்த லாரி உரிமையாளர்களுக்கு குடிநீர் குடிநீர் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 8-ஆம் தேதியிலிருந்து குடிநீர் வாரியத்தின் ஒப்பந்த லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வெளியான செய்தி தவறானது. லாரி உரிமையாளர்கள் அதுபோன்ற அறிவிப்பு எதையும் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது 9 ஆயிரம் லிட்டர் மற்றும் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 335 ஒப்பந்த லாரிகள் மூலம் நகரில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடை கால குடிநீர் பற்றாக்குறையைத் தவிர்க்கும் வகையில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 33 டேங்கர் லாரிகள் புதிதாக வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளன.
நாளொன்றுக்கு 4 ஆயிரம் நடைகள், லாரிகள் மூலம் நகரில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கட்டண உயர்வு கோரி ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் வரும் 8-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன் கூறியது:
9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகள் ஒரு முறை குடிநீர் விநியோகிக்க ரூ.304.80 வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது ரூ.319.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 6 ஆயிரம் லிட்டர் லாரிகளுக்கு ரூ.229.47-லிருந்து ரூ.252.13 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு கடந்த 3-ஆம் தேதி வெளியிடப்பட்டு லாரி உரிமையாளர்களுக்கு 4-ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது.
அனைத்துப் பகுதிகளுக்கும் இயக்க வேண்டும்: விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் எடுத்துச் செல்ல முடியாது எனவும், அதற்கு அதிகக் கட்டணம் வழங்குமாறும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஒப்பந்த விதிகளின்படி குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள எந்தப் பகுதியாக இருந்தாலும், அங்கு லாரிகள் இயக்கப்பட வேண்டும். குறைந்த தொலைவில்தான் லாரிகளை இயக்குவோம் என்ற அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாது.
வழக்கம்போல நகரில் லாரி குடிநீர் விநியோகம் நடைபெறும். அதில் தடை ஏற்பட வாய்ப்பில்லை என்றார் அவர்.
இந்த நிலையில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும்போது, அவ்வப்போது இடத்தை மாற்றிவிடும் நடவடிக்கைகளை கைவிடக் கோரி லாரி உரிமையாளர்கள் குடிநீர் வாரியத்துடன் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தை முடிவின் அடிப்படையில்தான் வேலைநிறுத்தம் குறித்த தெளிவான அறிவிப்பை வெளியிட முடியும் என்று ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.