அம்மா உணவகங்களில் சப்பாத்தி தயாரிக்க நவீன இயந்திரங்கள்
அம்மா உணவகங்களுக்காக ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்திகள் தயாரிக்கும் வகையிலான இயந்திரங்களை வாங்குவதற்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மேயர் சைதை துரைசாமி தலைமை வகித்தார்.
சப்பாத்தி தயாரிப்பு இயந்திரம்:சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களுக்கு சப்பாத்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு உணவகத்திலும் 2,000 சப்பாத்திகள் மற்றும் பருப்பு கடைசல் தயாரித்து மொத்தம் 4 லட்சம் சப்பாத்திகள் தயாரித்து வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக நவீன இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளது. நவீன இயந்திரங்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்திகள் தயாரிக்க முடியும். இந்த இயந்திரங்களை நிறுவ சுமார் 3 மாதம் ஆகும்.
சப்பாத்தி தயாரிக்க நவீன இயந்திரங்கள், பருப்பு கடைசல், சாம்பார், சாம்பார் சாதம், உள்ளிட்டவைகளை தயாரிக்க பொருள்கள் கொள்முதல் செய்ய, சுமார் ரூ.4 கோடி ஆகும் என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர புதிய மழைநீர் வடிகால்வாய் பணிகளை மேற்கொள்ளுவது, பழைய கட்டடங்களை இடிப்பது போன்ற 44 தீர்மானங்கள் மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
நிலம் கையகப்படுத்த ரூ.1.50 கோடி: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டெர்லிங் சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, கல்லூரி சாலை ஆகியவற்றை இணைக்கும் இணைப்புச் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஸ்டெர்லிங் 1-ஆவது சந்து முதல் ஸ்டெர்லிங் நிழற்சாலை வரை விரிவாக்கம் செய்ய தனியார் நிலங்களை கையகப்படுத்த தமிழ்நாடு நில எடுப்புச் சட்டம் 1894 அவசர பிரிவு 17 (2)-ன் கீழ் சென்னை மாநகராட்சி நிதியில் இருந்து சுமார் ரூ.1.5 கோடி செலவிட அரசின் நிர்வாக ஒப்புதலை பெறுவதற்கான தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஆகாய நடைபாதைகள்: மாம்பலம் ரயில் நிலையம், பாரிமுனை – கோட்டை ரயில்நிலையம் ஆகிய பகுதிகளில் ஆகாய நடைபாதைகள் அமைக்கவும், அடையாறு மற்றும் கோயம்பேடு பகுதியில் இணைப்புச் சாலை அமைக்கவும், நுங்கம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தியாகராய நகர், மயிலாப்பூர், வாலாஜா சாலை ஆகிய பகுதிகளில் நடைபாதைகள் அமைக்கவும் மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் அறிவித்திருந்தார்.
மேலும் கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை கடற்கரை ஆகியபகுதிகளை அழகுப்படுத்தும் பணி மற்றும் மெரினா கடற்கரையில் சைக்கிள் சுற்றுப்பாதை அமைக்கும் பணி ஆகியவற்றுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணிகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உரிய தீர்மானமும் மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.