தினமலர் 08.04.2010
அயோடின் கலக்காத உப்பு பாக்கெட் கடைகளில் கண்டுபிடித்து அழிப்பு
வேதாரண்யம்: அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்களை சுகாதாரத்துறையினர் கைப்பற்றி அழித்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உப்பில் குறிப்பிட்ட சதவீதம் அயோடின் கலந்து விற்பனை செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவை பெரும்பாலான உப்பு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் பொருட்படுத்துவதில்லை. அயோடின் கலந்த உப்பு என பெயரிடப்பட்ட பாலித்தீன் பைகளில் அயோடின் கலக்காத உப்பை விற்பனை செய்கின்றனர். இந்த உப்பை பயன்படுத்தும் பொதுமக்கள் தைராய்டு சுரப்பியில் பாதிப்பு ஏற்பட்டு பல நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். தமிழகத்தில் முன்னணி உப்பு உற்பத்தி பகுதியான தூத்துக்குடியில் இருந்து தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு வரும் உப்பு பாக்கெட்களில் போலி லேபிள் ஒட்டப்பட்டுள்ளது. வேதாரண்யம் பகுதியில் விற்பனைக்கு வந்த அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்களை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்து, அதை அழித்து வருகின்றனர்.
இதுபற்றி, நாகை மாவட்ட சுகாதார துணை இயக்குனர் வைரமணி கூறுகையில், ”நாகை கலெக்டர் (பொறுப்பு) அண்ணாதுரை உத்தரவுப்படி வேதாரண்யம் பகுதியில் அயோடின் உப்பு தயாரிப்பு நடக்கும் இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தவறான லேபிள்கள் ஒட்டப்பட்டு அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது. அயோடின் கலக்கப்படாத உப்பு பாக்கெட்களை போலீஸார் துணையுடன் பறிமுதல் செய்யப்படும். இந்த அயோடின் கலக்காத உப்புகளை ஏற்றிச் செல்லும் லாரிகளும் பறிமுதல் செய்யப்படும். அயோடின் கலந்த உப்புகளை ஆய்வு செய்வதற்காக கடை விற்பனையாளர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி ஆய்வு செய்து, வியாபாரிகள் அயோடின் கலந்த உப்பை மட்டும் வாங்கி விற்பனை செய்ய வேண்டும். அப்போதுதான், அயோடின் கலக்காத உப்பை விற்பனை செய்வதை தடை செய்ய முடியும்,” என்றார்.
வேதாரண்யம் பகுதியில் கைப்பற்றிய உப்பு பாக்கெட்களை நகராட்சி தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமையில் அழித்தனர். உணவு கலப்பட தடைச்சட்டப்படி ஒவ்வொரு கடையிலும் தொடர்ந்து உணவு மாதிரி எடுக்கப்பட்டு தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறது. இப்பணியில் நகராட்சி செயல் அலுவலர் வெங்கடேஸ்வரன், உணவு ஆய்வாளர் கோதண்டபாணி, துப்புரவு ஆய்வாளர் பிச்சைமுத்து, சுகாதார ஆய்வாளர்கள் மீனாட்சிசுந்தரம், அழகிரிபாலன், மற்றொரு பிச்சைமுத்து ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.