தினமணி 28.07.2010
அரசியல் குறுக்கீடுகளால் பாதிக்கப்படும் திண்டுக்கல் நகராட்சி வளர்ச்சிப் பணிகள்
திண்டுக்கல், ஜூலை 27: திண்டுக்கல் நகராட்சி பாதாளச் சாக்கடைத் திட்டம், சாலைகள் அமைத்தல், மின் மோட்டார் பொருத்திய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல் என பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும், நிதி வசதி இருந்தும், அரசியல் குறுக்கீடுகளால் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படாமலும், பூர்த்தி செய்யப்படாததாலும், வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருபவர் மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாலபாரதி. இவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் கடந்த 2008-09 ஆம் ஆண்டில் சவேரியார்பாளையத்தில் சமுதாயக்கூடம் அமைப்பதற்காக ரூ.10.3 லட்சம், பூச்சிநாயக்கன்பட்டி சமுதாயக்கூடம் அமைக்க ரூ.10.3 லட்சம், துப்புரவுத் தொழிலாளர் காலனியில் சுகாதார வளாகம் அமைக்க ரூ. 4 லட்சம், வேடபட்டியில் கட்டப்பட்டுவரும் சாண எரிவாயு மயானத்தில் தியான மண்டபம் அமைக்க ரூ.5 லட்சம், செல்லாண்டியம்மன் கோயில் தெருவில் கழிவு நீரோடை மற்றும் சிமெண்ட் தளம் அமைக்க ரூ. 2.5 லட்சம் என மொத்தம் ரூ.32.1 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதில், துப்புரவுத் தொழிலாளர் காலனியில் சுகாதார வளாகம் அமைப்பதற்காக ஏற்கெனவே செயல்பட்டுவந்த வளாகம் இடிக்கப்பட்டுள்ளது. புதிய வளாகம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்படாமல் பாதியுடன் நின்று போனதால், இப் பகுதியில் உள்ள பொதுமக்கள் கழிப்பிட வசதி இல்லாமல் இருந்து வருகின்றனர்.
இதேபோல, 2009-10 ஆம் ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ஒய்.எம்.ஆர்.பட்டியில் கழிவு நீரோடை மற்றும் சிமெண்ட் தளம் அமைக்க ரூ.2 லட்சம், எம்.எஸ்.பி. ஆசிரியர் காலனியில் கழிவு நீரோடை மற்றும் தார்ச் சாலை அமைக்க ரூ. 2 லட்சம், எம்.டி.எஸ். காலனியில் தார்ச் சாலை அமைக்க ரூ. 2.5 லட்சம், 10 மற்றும் 11-வது வார்டுகளில் தார்ச் சாலை அமைக்க தலா ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும், 10, 17, 30-வது வார்டு, முனிசிபல் காலனி, பூச்சிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் அங்கன்வாடி மையக் கட்டடம் அமைக்க தலா ரூ. 3 லட்சம், 28-வது வார்டு சௌராஷ்டிரபுரம் அண்ணாமலையார் பள்ளிச் சாலை, 31-வது வார்டு அனுமந்த நகர் ரயில்வே காலனி, அண்ணா நகர் பகுதியில் கழிவு நீரோடை, சிமெண்ட் தளம் அமைக்க தலா ரூ. 3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி வளர்ச்சி நிதியைப் பயன்படுத்தும் போது கண்டிப்பாக அங்கன்வாடி மையம் அமைக்க ரூ. 20 லட்சத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அரசு விதி உள்ளது. திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் அங்கன்வாடிக்காக ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு கிராமப்புறங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மட்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், நகராட்சிக்கு உள்பட்ட மையங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நாகல் நகர் பகுதி, பழனி சாலை அரசு உயர்நிலைப் பள்ளி அருகே பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க தலா ரூ. 3.3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டுக்கான வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.43.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 2 ஆண்டுகளில் நகராட்சி பகுதிகளில் ரூ.75.2 லட்சம் நிதி வழங்கப்பட்டும், அவை முறையாகப் பயன்படுத்தாததால், வளர்ச்சிப் பணிகளில் தேக்கம் ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலபாரதியிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:
திண்டுக்கல் நகர்மன்றத் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.நடராஜன் இருந்து வருகிறார். அரசியல் காரணங்களுக்காக சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தாததால், நகராட்சிப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு விதியின்படி, அங்கன்வாடி மையத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டும் பயன்படுத்தப்படாமல் உள்ளதும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் வழங்கிய தொகுதி நிதியைக் கொண்டு பஸ் நிறுத்தங்களில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடைகளுமே இதற்கு சாட்சி.
இதில் பல பணிகளுக்கு வேலை மேற்கொள்ளவதற்கான பணி உத்தரவு (ஒர்க் ஆர்டர்) வழங்கப்பட்டும், பணிகள் தொடங்கப்படாமல் உள்ளன. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டதன் பேரில், பூச்சிநாயக்கன்பட்டி அங்கன்வாடி மையம், செல்லாண்டியம்மன் கோயில் சுகாதார வளாகப் பணிகளை நகராட்சியே மேற்கொள்ள அறிவுறுத்தியும் பணிகள் நடைபெறவில்லை. சில பணிகளுக்கு 6 முறை டெண்டர்கள் விடப்பட்டும் யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை என எம்.எல்.ஏ.வுக்கு பதில் தரப்பட்டுள்ளது.
எனவே, வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட வார்டு பகுதிகளுக்கு நேரில் சென்று நிலைமையை பொதுமக்களுக்கு விளக்கி கையெழுத்து இயக்கம் நடத்தி, அதன் பிரதிகள் தமிழக முதல்வருக்கு அனுப்பப்படும். திண்டுக்கல் நகராட்சியில் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற தமிழக முதல்வர் உத்தரவிடக் கோரி, ஆகஸ்டு 16 ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே சுமுக உறவு இல்லாததன் காரணமாகவும், பொதுத் தேர்தல் வர இருப்பதாலும், அரசியல் உள்நோக்கம் காரணமாக திண்டுக்கல் நகராட்சியில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. கிடைத்துள்ள நிதிகளைக் கொண்டு பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்பதே நகர் மக்களின் கோரிக்கையாகும்.