தினமணி 20.02.2010
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அன்பழகன் எம்எல்ஏ திடீர் ஆய்வு
பழனி, பிப்.19: பழனியை அடுத்த பாலசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு செய்தார்.
பாலசமுத்திரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 200 முதல் 300 பேர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். ஆண்டுக்கு சுமார் 200 முதல் 230 பிரசவம் நடைபெறுகிறது.
இங்கு அன்பழகன் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு செய்தார். மருத்துவர், செவிலியர்கள், நோயாளிகள் ஆகியோரிடம் அவர் குறைகளைக் கேட்டார்.
மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லை என்றும், கட்டடம் உள்ள இடம் பேரூராட்சி பெயரிலேயே இருப்பதால் இங்கு புதிய கட்டடம் கட்ட வந்த நிதி திருப்பி அனுப்பப்பட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அன்பழகன் எம்எல்ஏ கூறியதாவது:
பேரூராட்சியிடம் இருந்து சம்பந்தப்பட்ட கட்டடத்தை சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்படும். இந்தக் கட்டடத்தின் அருகிலேயே சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் ரூ.5 லட்சம் செலவில் புதிய படுக்கை அறை கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்படும்.
மேலும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மக்களின் எண்ணிக்கை சுமார் 60 ஆயிரம் என்பதால், இதை கூடுதல் வசதியுள்ள அரசு ஆரம்ப சுகாதார மையமாக மாற்றவும், இதற்குட்பட்ட கலிக்கநாயக்கன்பட்டி அல்லது கோதைமங்கலத்தில் மற்றொரு சுகாதார மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அன்பழகன் எம்எல்ஏவிடம் கூடுதல் மருத்துவர், பணியாளர்கள் தேவை எனக் கோரிக்கை விடுத்தனர். மருந்துகள் வைக்குமிடம் உள்ளிட்ட பல பகுதிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ மகப்பேறு பிரிவில் குழந்தைகளைப் பார்த்து அவர்களுக்குத் தலா ரூ.100 அன்பளிப்பு வழங்கினார். உடன் திமுக பேரூராட்சிச் செயலர் முத்துசாமி உள்பட பலர் இருந்தனர்.