தினமலர் 25.03.2010
அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் குடிநீர் குழாய் உடைப்பு சீரானது
அவிநாசி: அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன் ஏற்பட்டிருந்த இரண்டாவது திட்ட குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது; தற்போது, வினியோகம் துவங்கியுள்ளது.திருப்பூருக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் இரண்டாவது குடிநீர் திட்ட குழாயில், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன் உடைப்பு ஏற்பட்டது. கடந்த 21ம் தேதி ஏற்பட்ட உடைப்பை அடுத்த இரு நாட்களில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பணியாளர்கள் சரி செய்தனர். உடைப்பு ஏற்பட்ட பகுதியில் 22 அடி ஆழத்துக்கு பொக்லைன் மூலம் ராட்சத குழி தோண்டப்பட்டு, உடைப்பு சரி செய்யப்பட்டது.
இதனால், காலதாமதம் ஏற்பட்டு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி, வழியோர கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் என்று பலரும் பாதிக்கப்பட்டனர்.உடைப்பு சரி செய்யப்பட்டதையடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து தண்ணீர் ‘பம்ப்‘ செய்யப்பட்டது. நேற்று முதல் வழக்கமான வினியோகம் தொடர்ந்தது. குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் (திருப்பூர் – மேட்டுப்பாளையம் இரண்டாவது குடிநீர் திட்டம்) செந்தில்நாதன் கூறியதாவது:
அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன்புறம் ஏற்பட்ட உடைப்பை இரண்டு முறை சரி செய்தோம். அப்பகுதியில் அதிகளவில் பஸ்கள் வந்து செல்வதாலும், பதிக்கப்பட்ட கான்கிரீட் குழாய்க்கு மேற்பகுதியிலுள்ள மண்ணின் தன்மை இளகி விட்டதாலும், அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது.இதை முற்றிலுமாக தவிர்க்கும் பொருட்டு, தற்போதுள்ள குழாயை எதிர்ப்புற பகுதிக்கு மாற்றியமைப்பது குறித்து உயரதிகாரிகளுடன் பேசி வருகிறோம். இதற்கான மதிப்பீடும் தயார் செய்யப்பட்டு, அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி வந்ததும் பணிகள் துவங்கி விரைவாக முடிக்கப்படும். கோடை காலத்தை சமாளிக்க, அனைத்து முன்னேற்பாடுகளை யும் குடிநீர் வடிகால் வாரியம் திட்டமிட்டு செய்து வருகிறது, என்றார்.குழாய் உடைப்பு சீரானதையடுத்து அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் நேற்று காலை முதல் குடிநீர் வினியோக பணி துவங்கியது.