தினகரன் 20.07.2010
ஆகஸ்டில் அமல் நடைபாதை வியாபாரிகளை முறைப்படுத்த சட்டம்
பெங்களூர், ஜூலை 20: நடைபாதை மற்றும் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தும் சட்ட விதிமுறைகள் ஆகஸ்ட் மாதம் முதல் அமலாக்கப்பட உள்ளது.
நடைபாதை மற்றும் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தும் வழிகாட்டுதல்களை மாநில அரசு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. நடைபாதை மற்றும் சாலையோர வியாபாரிகள் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் தங்கள் வியாபாரத்தை நடத்தி கொள்ளலாம் என்று இதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இப்புதிய விதிமுறைகளை உயர்நீதிமன்ற உத்தரவின் படி மாநகராட்சி ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து அமலாக்க இருக்கிறது.
இது குறித்து நகரவளர்ச்சி துறையிலிருந்து வந்துள்ள அறிவிக்கையின் படி மாநகராட்சியின் எல்லையில் வரும் நகரங்கள் மற்றும் மாநிலத்தின் இதர நகரங்களில் இந்த விதிகள் அமலாக இருக்கிறது. போக்குவரத்து மற்றும் பாதசாரிகளுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் சாலையோர வியாபாரிகள் தங்கள் கடைகளை அமைத்துகொள்ளலாம்.
குறிப்பிட்ட சாலைகளில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வியாபாரிகள் வியாபாரம் செய்யலாம். இவர்கள் நகர வளர்ச்சிதுறைக்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் உரிமம் வழங்கப்படும். 8 மீட்டர் அகலத்திற்கு குறைவாக உள்ள சாலைகளில் வியாபாரிகளுக்கு அனுமதி கிடையாது.