தினமலர் 25.05.2010
ஆடுதொட்டி சுகாதார சீர்கேட்டை கண்டித்து…சென்னையில் இறைச்சிகளுக்கு தட்டுப்பாடு
புளியந்தோப்பு : புளியந்தோப்பு ஆடுதொட்டியில், பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளாததை கண்டித்து, தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னையில், இறைச்சிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
புளியந்தோப்பு, அம்பேத்கர் கல்லூரி சாலையில், 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆடு, மாடு அறுக்கும் கூடம் (தொட்டி) உள்ளது.இங்கு வார நாட்களில் 2,500 ஆடுகள், 300 மாடுகள் வரையிலும், இறைச்சிக்காக அறுக்கப் படுகிறது.விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமையில் மட்டும் 9,000 ஆடுகளும், 1,000 மாடுகளும் அறுக்கப் படுகிறது.இங்கு அறுக்கப்படும் ஆடு மற்றும் மாடுகள் நகரின் பல பகுதிகளிலுள்ள இறைச்சி கடைகள், மார்க்கெட்டுகளுக்கு விற் பனைக்காகவும், நட்சத்திர ஓட்டல்கள் முதல் சிறிய ஓட்டல் கள் வரை, உணவு தயாரிப்பிற் காக விற்பனை செய்யப்படுகிறது.சில மாதங்களாக, இங்கு முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாத நிலை நீடிக்கிறது. அறுக்கப்பட்ட ஆடு மற்றும் மாடுகளின் கழிவு பொருட்கள் அகற்றப்படாமல் தேங்கிக்கிடந்தது. சமீபத்திய மழையில், அவை நனைந்து சகதியாக மாறியதால், ஆடுதொட்டி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது.ஆடு மற்றும் மாடுகளை அறுத்து கழுவும் தொட்டிகளிலும், தண்ணீர் தேங்கியதால், அவற்றில் ஏராளமான புழுக்கள் உருவாகின. இதனால் அங்கு தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
ஆடு, மாடுகளை அறுத்து, சுகாதாரமான முறையில் வெளியிடங்களுக்கு எடுத்து செல்ல முடியாத சூழ்நிலை உருவானது.இதுகுறித்து தொழிலாளர்கள் தரப்பில், பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும், எந்த பயனும் ஏற்படவில்லை.இதனால், அதிருப்தியடைந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், நேற்று காலை அம்பேத்கர் சாலையில் அமர்ந்து, திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது ஆடுகளை பிடித்து வந்து, சாலையில் நிறுத்தினர். ஒரு சிலர் ஆடுகளை தோள் மீது சுமந்தபடி, மறியலில் ஈடுபட்டனர். அச்சாலையில் காலை 6 மணி முதல், ஒரு மணி நேரத்திற்கு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்த, ராயபுரம் உதவி கமிஷனர் நவீன் சந்திரன் நாகேஷ் தலைமையில், புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட ஆடு தொட்டி தொழிலாளர்களை, கலைந்து செல்லுமாறு கூறினர்.ஆனால் அவர்கள் அங் கிருந்து நகராமல் தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மாநகராட்சி மண்டல சுகாதாரத்துறை அதிகாரி சார்லஸ் மற்றும் ஊழியர்கள் அங்கு வந்தனர்.ஆடுதொட்டியில், நிலவி வரும் குறைகளை சீரமைக்க, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.அதற்கு பிறகும் தொழிலாளர் கள் சாலை மறியலை கைவிடவில்லை. ஆடுதொட்டியில், உடனுக்குடன் பராமரிப்பு நடவடிக்கையை துவங்கினால் மட்டுமே, சாலை மறியலை கைவிடுவதாக அறிவித்தனர். இதையடுத்து ஆடுதொட்டியில், பராமரிப்பு நடவடிக்கைகள் துவங்கியது.சாலை மறியலை கைவிட்டு, தொழிலாளர்கள் கலைந்து சென் றனர். இதனால், நேற்று சென்னையில் இறைச்சி வகைகளுக்கு, கடும் தட்டுப்பாடு நிலவியது.