தினமணி 03.02.2010
ஆனைகட்டிக்கு மாறுகிறது வ.உ.சி. உயிரினப் பூங்கா!
கோவை, பிப்.2: கோவை நேரு விளையாட்டு அரங்கம் அருகேயுள்ள வ.உ.சி. வன உயிரினப் பூங்கா, ஆனைக்கட்டி ஊராட்சிப் பகுதிக்கு மாற்றப்படவுள்ளது.இதற்குத் தேவையான வருவாய்த்துறை நிலத்தை மாநகராட்சிக்கு வழங்க அனுமதி வழங்கும்படி, மாவட்ட நிர்வாகம் சார்பில் மாநில அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.நாடு முழுவதும் வன உயிரினப் பூங்காக்களில் நிலவும் இடப்பற்றாக்குறை, விலங்குகளின் சுதந்திரம், இயற்கைச் சூழலில் விலங்குகள் பாதுகாக்கப்படாத சூழல் உள்ளிட்டவை குறித்து தேசிய வன உயிரினப் பூங்கா ஆணையம் 1996 முதல் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகிறது.
கோவை வ.உ.சி. வன உயிரின பூங்காவிலும் இடப்பற்றாக்குறை, வன விலங்குகள் பாதுகாக்க முடியாத சூழல் இருந்து வருகிறது. இங்கிருந்த சிங்கம், புலி, கரடி போன்ற அரிய வன விலங்குகள் ஏற்கெனவே சென்னைக்கு அனுப்பப்பட்டுவிட்டன.பூங்காவில் இருக்கும் உயிரினங்கள்: வ.உ.சி. பூங்காவில் உள்ளூர், வெளியூர் பறவைகள் என மொத்தம் 27 வகை இனங்களில் 242 பறவைகள் உள்ளன. நரி, ஒட்டகம், கடமான், புள்ளிமான், குரங்குகள் என மொத்தம் 362 விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இங்கு இருக்கும் பறவைகள், விலங்குகளின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, பூங்காவின் பரப்பு (சுமார் 4 ஏக்கர்) குறைவாக உள்ளது. போக்குவரத்து நெருக்கடியான இடத்தில் இருப்பதால் வாகன இரைச்சல் காரணமாக வன விலங்குகள் அடிக்கடி பாதிக்கப்படுகின்றன.இந்நிலையில் வ.உ.சி. வன உயிரினப் பூங்காவை, கோவையை அடுத்த எட்டிமடையில் உள்ள கல்லாங்குத்து புறம்போக்கு நிலத்தில் இயற்கை சூழலில் அமைக்கலாம் என மாநகராட்சி கல்வி மற்றும் பூங்காக்கள் குழு பரிந்துரை செய்திருந்தது.
எட்டிமடை நிராகரிப்பு:இதையடுத்து இப்பகுதியில் இருக்கும் 68 ஏக்கர் நிலத்தை வனஉயிரினப் பூங்கா அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தேசிய வன உயிரினப் பூங்கா ஆணைய அதிகாரிகள் 2 மாதங்களுக்கு முன்பு எட்டிமடையில் இப் பூங்கா அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்தனர்.
பூங்கா அமையவுள்ள இடத்துக்கு அருகே ரயில் பாதை அமைந்துள்ளதால் விலங்குகள் பாதிக்கப்படும் என்றும், தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் குன்றுகள் அதிகமாக இருப்பதாலும் அந்த இடத்தை அதிகாரிகள் நிராகரித்தனர்.இதுதவிர அப்பகுதி யானை வழித்தடத்தில் இருப்பதால் அதை தேர்வு செய்ய வனத்துறையும் எதிர்ப்பு தெரிவித்தது.இந்நிலையில் ஆனைக்கட்டி ஊராட்சியில் உள்ள 250 ஏக்கர் வருவாய் நிலத்தில் 50 ஏக்கர் ஒதுக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம், மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
சிறை வளாகத்தில் இடம் கிடைக்குமா?:இதற்கு உரிய அனுமதி வழங்கும்படி மாநில அரசுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும். இப்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் வன உயிரின பூங்கா அமைக்க சாதகமாக உள்ளது என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.
கோவையில் இருந்து ஆனைக்கட்டி செல்ல சுமார் 30 கி.மீ. பயணம் செய்ய வேண்டும். இங்கிருந்து அவ்வளவு தொலைவுக்குப் பயணம் செய்து வனஉயிரினப் பூங்காவை பொதுமக்கள் பார்வையிடுவார்களா? என்பது கேள்விக்குறி தான்.எனவே, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை சிறையில் அமையவுள்ள தாவரவியல் பூங்கா அருகே வனஉயிரின பூங்காவுக்கும் குறைந்தபட்சம் 20 ஏக்கர் ஒதுக்க வேண்டும் என்பது வன உயிரின ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.