தினமலர் 19.03.2010
ஆழியாறு அணை நீர்மட்டம் திருப்திகரம்; கோடையை எளிதில் சமாளிக்கலாம் : இந்தாண்டு குடிநீர் பஞ்சம் வர வாய்ப்பே இல்லை
பொள்ளாச்சி: ஆழியாறு அணையில் போதுமான அளவுக்கு நீர்மட்டம் உள்ளதால், ஆழியாறு ஆற்றுப்படுகையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டங்களில் இந்தாண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது. பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை ஆதாரமாக வைத்து குடிநீர் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆழியாறு ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள குடிநீர் திட்டங்களுக்காக ஆற்றில் கணிசமான அளவுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.பாசன மேம்பாட்டிற்காக கட்டப்பட்ட அணையாக இருந்தாலும், மக்களின் குடிநீர் தாகத்தை போக்கும் வற்றாத ஆறாக ஆழியாறு அமைந்துள்ளது.
ஆழியாறு ஆற்றில் மயிலாடுதுறையில் வேட்டைக்காரன்புதூர்– கோட்டூர் மற்றும் 38 கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டம் உள்ளது. அதையடுத்து ஆனைமலையில் வேட்டைக்காரன்புதூர்– ஆழியாறு மற்றும் வழித்தட கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டம், அம்பராம்பாளையத்தில் சூளேஸ்வரன்பட்டி மற்றும் 38 கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டம், ஜமீன்ஊத்துக்குளி குடிநீர் திட்டம், கிணத்துக்கடவு– நெகமம் மற்றும் வழித்தட பகுதிக்கான குடிநீர் திட்டம், பொள்ளாச்சி நகராட்சி குடிநீர் திட்டம் போன்றவை அமைந்துள்ளது.பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, குடிமங்கலம் மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள 295 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம், ஆத்துப்பொள்ளாச்சியில் கிணத்துக்கடவு பேரூராட்சி, குறிச்சி மற்றும் குணியமுத்தூர் நகராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் அமைந்துள்ளது.ஆழியாறு ஆற்றில் மொத்தம் எட்டு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் அமைந்துள்ளன. ஆழியாறு ஆற்று நீர் சுத்தகரிக்கப்பட்டு ஒரு கிராமம் தவறாமல் வழங்கும் வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் பூஸ்டர் ஹவுஸ் அமைத்து தண்ணீர் உந்தி கொண்டு செல்லப்படுகிறது.ஆழியாறு குடிநீர் கிடைப்பதால் கிராமங்களின் உள்ள உள்ளூர் நீர் ஆதாரங்களான பொதுக்கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளை ஊராட்சி நிர்வாகங்கள் இயக்காமல் விட்டு விட்டனர். தற்போது ஆழியாறு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதால் ஒவ்வொரு பகுதியிலும் பிரச்னைகள் தலைதூக்கத்துவங்கியுள்ளது.மக்கள் காலிக்குடங்களுடன் ரோட்டுக்கு வந்து மறியல் செய்கின்றனர். ஆழியாறு குடிநீர் வந்து ஒரு மாதத்திற்கு மேலாகிறது என்று குரல் கொடுக்கின்றனர். ஆழியாறு அணையில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பில் உள்ளது.
மேலும், ஆழியாறு ஆற்றின் மூலம் கேரளாவுக்கு தண்ணீர் வழங்குவதால் குடிநீர் திட்டங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கிறது. ஆனாலும் குடிநீர் வினியோகம் செய்ய முடியாததால் தினமும் புதிதாக பிரச்னைகள் உருவாகிறது.குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘ஆழியாறு ஆற்றில் தண்ணீர் எடுப்பதில் எந்த சிக்கலும் இல்லை. அனைத்து குடிநீர் திட்டங்களுக்கும் சேர்த்து தினமும் 110 மில்லியன் லட்சம் லிட்டர் குடிநீர் சுத்தகரிப்புக்காக எடுக்கப்படுகிறது.சுத்தகரிப்பு நிலையத்தில் தினமும் இரண்டு மணி நேரம் கட்டாய மின்தடை ஏற்படுகிறது.
அதன்பின், அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்படும் தண்ணீரை கொண்டு செல்லும் பூஸ்டர் ஹவுசிலும் மின்தடை ஏற்படுவதால் குடிநீர் வினியோகத்தில் பிரச்னை ஏற்படுகிறது.மின்தடை நேரத்தை ஒரே மாதிரி மாற்றி அமைத்து வினியோகத்தில் சிக்கல் ஏற்படாமல் இருக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென்று மின்வாரியத்திற்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது‘ என்றனர்.அதனால், ஆழியாறு ஆற்றில் தண்ணீர் ஆண்டு முழுவதும் சென்று கொண்டே இருக்கும். ஆழியாறு ஆற்றப்படுகையில் குடிநீர் திட்டங்கள் அமைந்துள்ளதால், குடிநீர் தேவைக்கேற்ற அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது