தினமலர் 14.05.2010
ஆஹா…! கோவைக்கு பெருமை சேர்க்கும் ‘ஹைடெக் பஸ் ஸ்டாண்ட்‘ செம்மொழி மாநாடுக்கு முன்பே திறக்க மாநகராட்சி ஜரூர்
தமிழகத்தின் முதல் ‘ஹைடெக் பஸ் ஸ்டாண்ட்‘ கோவை – மேட்டுப்பாளை யம் ரோட்டில் விரைவில் திறக்கப்படவுள்ளது. பயணிகளுக்கான வசதிகள், சுற்றுச்சூழல் பராமரிப்பு, பாதுகாப்பு, தொழில் நுட்பம் என பல விதத்திலும் சிறப்பம்சங்களை கொண்ட பஸ் ஸ்டாண்ட்டுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று பெற விண்ணப்பித்துள்ளது, மாநகராட்சி நிர்வாகம். கோவையில் இருந்து ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் நகரங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள், கோவை நகருக்குள் வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, கோவை – மேட்டுப்பாளையம் ரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. மொத்தம் 5.58 கோடி ரூபாயில் கட்டுவதற்கான அரசாணை, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது 2005, பிப்.18.,ல் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அதற்கான முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை. ஆட்சி மாற்றத்துக்குப் பின், புதிய மாநகராட்சி கவுன்சில் பொறுப்பேற்றதும், பஸ் ஸ்டாண்ட் கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அரசின் ஒப்புதல் பெற்று, கடந்த 2007ல் டெண்டர் விடப்பட்டு 2008 மே 28ல் பணி உத்தரவு வழங்கப்பட்டது. மொத்தம் 6.58 கோடி ரூபாயில் பஸ் ஸ்டாண்ட் கட்ட, மேட்டுப்பாளையம் ரோட்டில் சங்கனூர் பகுதியில் மூன்று ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.
மத்திய அரசின் நிதி கிடைக்காததால், மாநகராட்சி நிதியில் இதற்காக ஏழு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பஸ் ஸ்டாண்டிலிருந்து எதிர் பகுதிக்கு செல்ல, சுரங்க நடைபாதையுடன் சேர்த்தே மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. ஆனால், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அனுமதி கிடைக்கவில்லை. இப்போது, சுரங்க நடைபாதை இல்லாமலே, பஸ் ஸ்டாண்ட் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வெளிப்பகுதியில் நிறைய பிரச்னைகள் இருந்தாலும், தமிழகத்தின் முதல் ‘ஹைடெக்‘ பஸ் ஸ்டாண்ட் என, கூறும் அளவுக்கு ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பஸ் ஸ்டாண்ட் மேற்பகுதியில் ‘வாகன பார்க்கிங்‘ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டில், ஒரே நேரத்தில் 25 பஸ்களை நிறுத்த முடியும். அழகான தூண்கள், பளிச்சிடும் டைல்ஸ்கள்என தரை தளம் கவர்கிறது. தரை தளத்திலும் 64 ‘டூ வீலர்‘கள், 20 ஆட்டோக்களை நிறுத்த ‘பார்க்கிங்‘ வசதி உள்ளது.
முதல் தளத்திலுள்ள ‘பார்க்கிங்‘கில் 18 கார்கள் மற்றும் 361 ‘டூ வீலர்‘களை நிறுத்த முடியும். டிக்கெட் ரிசர்வேஷன் கவுன்டர், அலுவலக அறைகள்– 2, பொருட்கள் பாதுகாப்பு அறை, ரெஸ்டாரன்ட், மணிக்கூண்டு, பத்திரிகைகள் மற்றும் பால் விற்பனைக்கடைகள் – 6, மின்சார அறை என எல்லாமே தரை தளத்தில் உள்ளன. ஆண், பெண்களுக்கென தனித்தனியாக குளிரூட்டப்பட்ட ‘ஏசி‘ ஹால் இருப்பதே, இந்த பஸ் ஸ்டாண்டின் ஸ்பெஷல். கண்டக்டர், டிரைவர் ஓய்வெடுக்க ‘ஏசி‘ வசதியுடன் அறை உள்ளது. பஸ் ஸ்டாண்டில் ‘ஓசோனேட் டடு‘ முறையில் நான்கு கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டிருப்பதால், சுகாதாரம் மேம்படும் வாய்ப்புள்ளது. பஸ் ஸ்டாண்டை சுற்றிலும், முதல் தளத்திலும் பசுமை தோட்டம் அமைக்கப்பட்டு, வாகனங்கள் வெளியிடும் கார்பனை உறிஞ்சும் வகையிலான செடிகள் வைக்கப்பட்டுள்ளன. அவை, சூழலை பாதுகாப்பதுடன், பஸ் ஸ்டாண்ட்டின் அழகுக்கு, அழகு சேர்க்கின்றன.
பஸ் ஸ்டாண்டுக்கு தரப்பட்டுள்ள வண்ணப்பூச்சு அமர்க்களம் என்றால், ‘அல்பாபேனலிங்‘ முறையில் உருவாக்கப்பட்டுள்ள முகப்பு பகுதியும் அசத்துகிறது. உட்புறத்தில் அமைக்கப்படும் செயற்கை நீரூற்று, பஸ் ஸ்டாண்ட் சூழலுக்கு பொலிவூட்டுகிறது. பஸ் ஸ்டாண்ட் பாதுகாப்பை உறுதிப்படுத்த 14 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மூன்று கோபுர விளக்குகள், 20 மெட்டல் அலாய் விளக்குகளுடன் இரவிலும் ஜொலிக்கத் தயாராகி வருகிறது புதிய பஸ் ஸ்டாண்ட். இந்த ‘ஹைடெக்‘ பஸ் ஸ்டாண்டுக்கு கலைநயத்துடன் கூடிய நுழைவாயில் அமைக்கப் படுகிறது. தாழ்வான பகுதியில் பஸ் ஸ்டாண்ட் இருப்பதால், மழை நீர் வடிகாலும் மிகக்கவனத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பம்சங்களுடன் இருப்பதால், இந்த பஸ் ஸ்டாண்ட்டுக்கு ‘ஐ.எஸ்.ஓ.,9001′ சான்று பெற மாநகராட்சி நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது. பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணியை மேற்கொள்ளும் கட்டுமான நிறுவனம், இன்னும் ஓரிரு நாட்களில் பணி முடித்து, முறைப்படி மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கவுள்ளது. செம்மொழி மாநாட்டுக்கு முன்பாகவே, புதிய பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும் வாய்ப்புள்ளது. மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், ”செம்மொழி மாநாட்டுக்கு முன்பாக இந்த பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும். ஐ.எஸ்.ஓ., சான்று பெற விண்ணப்பித்துள்ளோம். வரும் ஆறு மாதங்களுக் குள் இரு முறை ஆய்வுக் குழு வந்து பரிசீலிக்கும். அப்போது பராமரிப்பு நன் றாயிருக்கும்பட்சத்தில், தரச்சான்று கிடைக்க வாய்ப்புள்ளது,” என்றார்.
ஆணையம் ஒப்புதல் : புதிய பஸ் ஸ்டாண்டை ஆய்வு செய்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள், அங்கு பஸ் ஸ்டாண்டை இடம் மாற்ற ஒப்புதல் அளித்துள்ளனர். ஆனால், பாதசாரிகள் அந்த இடத்தில் ரோட்டைக் கடப்பதில் பெரும் சிரமம் உள்ளது. இதனால், சுரங்க நடைபாதை அமைக்க வேண்டியது கட்டாயம். இது குறித்து, கமிஷனர் அன்சுல் மிஸ்ராவிடம் கேட்டபோது, ”அங்கு சுரங்க நடைபாதை அமைக்க ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. ரோடு அகலப்படுத்தும் பணி முடிந்தபின்னரே, அந்த பணியை துவக்க முடியும்,” என்றார்.
-நமது நிருபர் –