தினமலர் 11.03.2010
இந்திய பெண்கள் இதயத்தில் நீங்கா இடம்: சோனியாவுக்கு திருச்சி மேயர் புகழாரம்
திருச்சி: “பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு என்பதை கட்டாயமாக்கி, இந்திய பெண்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றுள்ளார் சோனியா‘ என்று திருச்சி மாநகராட்சி மேயர் சுஜாதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நம் இந்திய நாட்டின் கலாச்சாரமும், பண்பாடும் இதுநாள் வரை பெண்களை உயர்த்திப் பிடிக்கும் இலக்கியங்களாக, இதிகாசங்களாக மட்டுமே இருந்தன. இன்றைக்கு அரசியல் சட்டமாக, அரசின் சட்டமாக 33 சதவீத இட ஒதுக்கீடு என்பதை கட்டாயமாக்கி, இந்திய பெண்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றுள்ளார் சோனியா.
எந்த ஒரு நாட்டிலும், மொழியிலும், சமுதாயத்திலும், மதத்திலும் பெண்களை மையமாக வைத்தே அனைத்தும் இயங்குகின்றன. பெண் என்ற சொல்லை உச்சரிக்கும் போதே பொறுமை, அன்பு, பொறுப்பு ஆகிய குணங்கள் கண்முன்னே தோன்றும். இரக்கம் காட்டும் விஷயத்தில் தெய்வமும், பெண்ணும் ஒரே நேர்கோட்டில் உள்ளனர். “ஆண் மகனால் செய்து காட்ட முடியாத எந்தவொரு காரியத்தையும் பெண் செய்து காட்டவேண்டும்‘ என்றார் காந்தியடிகள். பாரதியார், பாரதிதாசன் உட்பட ஏராளமான பெரியோர் பெண்களை சிறப்பித்துக் கூறியுள்ளனர். தமிழக துணை முதல்வரின் தூய உழைப்பினால், கிராமப் புறங்களில் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்கள் உயர்ந்துள்ளனர். “எந்த சமுதாயத்தில் பெண்ணுக்கு மரியாதை தரப்படுகிறதோ, அந்த சமுதாயம் முன்னேற்றப் பாதையில் செல்லும்‘ என்ற ஸ்வாமி விவேகானந்தரின் கூற்றை மனதில் கொண்டு, 33 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக பெண்கள் சார்பில் வரவேற்கிறேன். ஈ.வெ.ரா., காமராஜர் போன்றோரின் கனவை நனவாக்கிய சோனியாவிற்கும், மத்திய அரசின் முடிவுகளுக்கு முதல் ஆதரவை அளிக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் திருச்சி மாநகராட்சி மற்றும் பெண்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.