தினமலர் 26.07.2010
இரவு நேர தள்ளுவண்டி கடைகள் : சுகாதார துறை நடவடிக்கை அவசியம்
தர்மபுரி: தர்மபுரி நகரில் நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் இரவு நேர தள்ளுவண்டி கடைகளில் சுகாதார துறையினர் திடீர் சோதனை நடத்தி உணவு பொருட்களில் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
தர்மபுரி நகரில் பெரிய, சிறிய ஹோட்டல்கள், மாலை நேர அந்திக்கடைகள், மெஸ்கள் இருந்த போது, மாலை மற்றும் இரவு நேரங்களில் சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு செய்து விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை சாப்பிட ஒரு கூட்டம் உள்ளது.
குறிப்பாக இரவு 8 மணிக்கு மேல் பெரிய கடைகளில் டிபன் உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை முடிந்து விடுவதால், பெரும்பாலானவர்கள் இரவு நேர தள்ளுவண்டி அந்திக்கடைகளை நம்பியுள்ளனர். குறிப்பாக வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் பஸ் ஸ்டாண்ட் பகுதியை சுற்றியுள்ள இரவு நேர தள்ளுவண்டி கடைகளில் அவசரத்துக்கு சாப்பிட்டு செல்கின்றனர்.
விற்பனையை மட்டும் குறி வைத்து, மலிவு விலையில் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால், தரம் குறைந்த ஆயில் உள்ளிட்ட பொருட்கள் மூலம் உணவு பதார்த்தங்கள் தயார் செய்து விற்பனை செய்கின்றனர்.
சிக்கன், மீன் உள்ளிட்டவைகளும் எண்ணெயில் வறுத்து விற்பனை நடக்கிறது. இதற்கு தரம் குறைந்த ஆயில் மற்றும் மக்கிய பல நாட்கள் பயன்படுத்தும் எண்ணெய் பயன்படுத்தப்படுவதால், அவசரத்துக்கு சாப்பிடும் பலருக்கும் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் திறந்த வெளியில் உணவு பொருட்களை வைப்பதோடு, சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நகராட்சி சுகாதார அதிகாரிகள் இது குறித்து திடீர் ஆய்வு நடத்தி மக்களுக்கு கேடு விளைவிக்கும் உணவு பொருட்கள் விற்பனை செய்வோரை கட்டுப்படுத்த வேண்டும். தரமான பொருட்களை கொண்டு கடை நடத்துவோருக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டும்.