தினமலர் 06,03.2013
இலவசமாக கொசு வலை வழங்கும் திட்டம் ஆர்வம் காட்டும் நிறுவனங்களுக்கு அழைப்பு
சென்னை:விலையில்லா கொசு வலை வினியோகம் செய்ய, ஆர்வம் காட்டும் நிறுவனங்கள், கொசுவலை மாதிரிகளுடன், 13ம் தேதி நேரில் வர வேண்டும் என,மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.சென்னையில், கொசு ஒழிப்புக்காக, ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய் வரை செலவிட்டும் போதிய பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில், கால்வாய் ஓரம் மற்றும் சாலையோரங்களில் வசிப்போருக்கு, இலவசமாக கொசு வலைகள் வழங்கப்படும் என, கடந்த மாநகராட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளின் பட்டியல் வார்டுகள் தோறும் சேகரிக்கப்படுகிறது. மேலும், கொசு வலை வினியோகம் செய்ய, ஆர்வம் காட்டும் நிறுவனங்களுக்கு மாநகராட்சி அழைப்பு விடுத்து உள்ளது.கொசு வலைகள் பாலி எத்திலினால், ஒற்றை இழையால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.ஒரு சதுர அங்குலத்திற்கு, 156 துளைகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.அதிக அளவில் கொசு வலைகள் தயாரிப்போர், ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய்க்கு மேல் கொசு வலை விற்பனை செய்வோர் பங்கேற்கலாம், என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.”ஆர்வமுள்ள நிறுவனங்கள், வரும் 13ம் தேதி, ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள, மாநகர சுகாதார அலுவலரை நேரில் சந்தித்து, விருப்ப கடிதம் மற்றும் நடுத்தர, பெரிய அளவில் உள்ள கொசு வலைமாதிரிகளையும் அளிக்கலாம்’ என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.நிறுவனங்கள் தரும் கொசு வலைகளின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, எந்த மாதிரியான வலை வாங்குவது என, முடிவு செய்து, அதன்பின், ஒப்பந்தம் கோரப்படும் என, தெரிகிறது.