தினமணி 08.02.2010
இலவச வீட்டுமனைத் திட்டம்: ஆட்சியர் வேண்டுகோள்
நாகப்பட்டினம், பிப். 7: நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் அரசுக்கு நிலம் வழங்க முன்வருமாறு நில உரிமையாளர்களுக்கு நாகை ஆட்சியர் ச. முனியநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மூலம் நிகழ் நிதியாண்டில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தில் ரூ. 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நாகை வட்டம், பனங்குடி கிராமத்தில் ரூ. 5.9 லட்சம் மதிப்பில் சுமார் 30 பேருக்கும், 80. வடுகச்சேரி கிராமத்தில் 5.4 லட்சம் மதிப்பில் 30 பேருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள ரூ. 23,68,823 நிதி ஒதுக்கீட்டில் 340 ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர்களுக்கு மயானம், மயானப் பாதை மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குப் பாதை வசதி ஆகியவற்றுக்காக நிலம் கையகப்படுத்த ரூ. 1.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், வாட்டாக்குடி, வடக்குப் பொய்கைநல்லூர், தென்னாம்பட்டினம், ஆறுபாதி, மடப்புரம் ஆகிய பகுதிகளில் மயான விரிவாக்கம், மயானப் பாதை மற்றும் காலனி பாதை அமைக்க ரூ. 95,323 மதிப்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், நில உரிமையாளர்கள் அரசுக்கு நிலம் அளிக்க முன்வர வேண்டும் என அவர் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.