தினத்தந்தி 22.08.2013
ஈரோடு மாநகராட்சியில் தெருவிளக்குகள் பராமரிக்கும் திட்டம்: மேயர் மல்லிகா தொடங்கி வைத்தார்
ஈரோடு மாநகராட்சியில் தனியார் பங்களிப்புடன் தெருவிளக்குகள் பராமரிக்கும் திட்டத்தை மேயர் மல்லிகா பரமசிவம் தொடங்கி வைத்தார்.
தெருவிளக்குகள் பராமரிப்பு
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் தெருவிளக்குகள்
அமைத்து பொதுமக்களுக்கு வசதி ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள்
நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக தெருவிளக்குகளை தனியார் பங்களிப்புடன் பராமரிப்பு
செய்ய ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து, கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு 10 ஆண்டுகள்
தெருவிளக்குகள் பராமரிப்பு பணிக்கான ஒப்பந்தம் அளிக்கப்பட்டு உள்ளது.
மேயர் தொடங்கி வைத்தார்
இந்த திட்டத்துக்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை பிரப் ரோட்டில்
ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஈரோடு மாநகராட்சி துணை
மேயர் கே.சி.பழனிச்சாமி தலைமை தாங்கினார். ஈரோடு ஆணையாளர் விஜயலட்சுமி,
செயற்பொறியாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஈரோடு
மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் கலந்து கொண்டு தனியார் பங்களிப்புடன்
தெருவிளக்குகள் பராமரிப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் ரா.மனோகரன், காஞ்சனா
பழனிச்சாமி, உதவி ஆணையாளர் அசோக்குமார், கவுன்சிலர் ராதாமணிபாரதி உள்பட
பலர் கலந்து கொண்டனர்.
ரூ.18¾ கோடி
இந்த திட்டத்துக்காக மாநகராட்சி மூலம் ரூ.18 கோடியே 89 லட்சம் நிதி
ஒதுக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக கோவை தனியார் நிறுவனத்தினர்
மாநகராட்சி முழுவதும் தெருவிளக்குகளின் தேவை, தற்போதைய விளக்குகளின்
வெளிச்சம், மின்சக்தி செலவு, புதிய தெருவிளக்குகள் அமைக்கப்பட வேண்டிய
இடங்கள் போன்ற விவரங்களை சேகரிக்க உள்ளனர். இந்த தணிக்கை பணி 3 மாதங்கள்
நடைபெறும். தணிக்கையின் அடிப்படையில் 2–வது கட்ட பணிகள் தொடங்கும்.
குறிப்பாக 40 வாட்ஸ் குழல் விளக்குகளுக்கு (டியூப் லைட்) பதில் எல்.ஈ.டி.
விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. மின் அழுத்த கட்டுப்பாட்டு கருவி,
தெருவிளக்கு கட்டுப்பாட்டு கருவி ஆகியவை புதிதாக பொருத்தப்பட உள்ளன.
தனித்தனி விளக்கு ஆய்வு கருவிகளும் பொருத்தப்பட உள்ளன. தெருவிளக்குகள்
எரிவதை கண்காணிக்க கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது.
மேற்கண்ட திட்டங்கள் மூலம் ஈரோடு மாநகராட்சியில் தெருவிளக்கு சேவையை மேம்படுத்தவும் மின்சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்படவும் உள்ளன.