தினமலர் 17.04.2010
ஈரோட்டில் துவங்கியது பாதாள சாக்கடை பணி : வீடுகளுக்கு கட்டணம் நிர்ணயம்
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி துவங்கி உள்ளது. ‘செப்ரேட் சிஸ்டம்‘ அடிப்படையில் பாதாள சாக்கடை கட்டுவதால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஈரோடு மாநகராட்சி மற்றும் வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, காசிப்பாளையம், பெரியசேமூர் ஆகிய நான்கு நகராட்சி பகுதிகளில் 209.22 கோடி ரூபாய் மதிப்பிட்டில் பாதாள சாக்கடை அமைக்கப்பட உள்ளது. பாதாள சாக்கடை கட்டும் பணி ஐந்து பேக்கேஜ்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பேக்கேஜில் ஈரோடு மாநகராட்சி 14, 15, 23 முதல் 28, 37 முதல் 40 ஆகிய வார்டுகளின் முழுப்பகுதியும், 12, 13, 21, 22, 29, 42 ஆகிய வார்டுகளின் சில பகுதிகளிள், சூரம்பட்டியில் 1 முதல் 18 வார்டுகள் முழுப்பகுதி, காசிப்பாளையத்தில் 1, 2, 3, 21 வார்டுகள் முழுப் பகுதி, 4, 5, 19, 20 ஆகிய வார்டுகள் சில பகுதி, வீரப்பன்சத்திரம் நகராட்சியில் 17வது வார்டு முழுப்பகுதி, 12, 15, 16, 18 முதல் 21 வார்டுகளில் சில பகுதிகள் அடங்கி உள்ளன. இரண்டாம் பேக்கேஜில் ஈரோடு மாநகராட்சி 1 முதல் 11, 16 முதல் 20, 30 முதல் 36, 41, 43,44,45 ஆகிய வார்டுகள் முழுப்பகுதியும், 12, 13, 21, 22, 29, 42 ஆகிய வார்டுகளில் சில பகுதியும், வீரப்பன்சத்திரம் நகராட்சி இரண்டு முதல் ஐந்து வார்டுகள் முழுப்பகுதியும், 1, 6 முதல் 9 வார்டுகள் சில பகுதியும் அடங்கி உள்ளன. மூன்றாம் பேக்கேஜில் பெரியசேமூர் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகள், வீரப்பன்சத்திம் நகராட்சியில் உள்ள 10, 11, 13, 14 வார்டுகள் முழுப்பகுதி, வீரப்பன்சத்திரம் நகராட்சி 1, 6 முதல் 9, 12, 15, 16, 18 முதல் 21 வார்டுகளில் சில பகுதிகள் அடங்கியுள்ளன. நான்காம் பேக்கேஜில் காசிபாளையம் நகராட்சி 6 முதல் 18 வார்டுகள் முழுப்பகுதி, 4, 5, 19, 20 வார்டுகள சில பகுதிகள் அடங்கி உள்ளன. ஐந்தாவது பேக்கேஜில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.
பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்கு முதல் மற்றும் மூன்றாம் பேக்கேஜ் டெண்டர் நிறைவுற்றுள்ளது. இரண்டாவது பேக்கேஜ்க்கான டெண்டர் விரைவில் கோரப்படும். நான்காம் பேக்கேஜ் டெண்டருக்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெண்டர் விடப்பட்டுள்ள சில பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க குழி தோண்டும் பணி நடக்கிறது. கழிவு நீர் சுத்திகரிப்பு செய்ய பீளமேட்டில் 18.5 ஏக்கரில் நிலம் வாங்கப்பட உள்ளது. பாதாள சாக்கடையில் வீட்டு கழிவு நீர், கழிப்பறை கழிவு நீர், சமையலறை கழிவு நீர் மட்டுமே செல்ல முடியும். மழை நீர் செல்வதற்கான வசதி இல்லை. பாதாள சாக்கடைத் திட்டத்துக்கு மக்களிடம் இருந்து வைப்புத்தொகை மற்றும் பராமரிப்பு தொகை கட்டணம் வசூலிக்கப்படும். 500 சதுர அடி பரப்பளவு உள்ள வீட்டுக்கு 5,000 ரூபாய் வைப்புத் தொகை, மாதாந்தோறும் 70 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். வீட்டு உபயோகமற்ற இடத்துக்கு 500 சதுர அடிக்குள் 10 ஆயிரம் ரூபாய் வைப்புத்தொகை, 140 ரூபாய் மாதக் கட்டணம் செலுத்த வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் கட்டணம் மற்றும் வைப்புத்தொகையை குறைந்தபட்சம் 15 சதவீதம் உயர்த்தப்படும். இவ்வளவு பணம் மக்களிடம் வசூலிக்கப்பட்டு பாதாள சாக்கடை கட்டப்படுவது எதற்காக? வெறும் கழிவு நீர் செல்ல மட்டுமா?. தற்போதே அனைத்து பகுதிகளிலும் கழிவுர் நீர் நன்றாக செல்கிறது. மழைக்காலங்களில் மட்டுமே மக்கள் சிரமப்படுகின்றனர். பாதாள சாக்கடை திட்டம் வந்த பிறகாவது மக்களுக்கு நிம்மதி கிடைக்கும் என்று பார்த்தால், அது நடக்காது போல் தெரிகிறது. சென்னை போன்ற மாநகரத்தில் ‘கம்பைன்ட் சிஸ்டம்‘ முறையில் பாதாள சாக்கடை கட்டப்பட்டுள்ளது. இதனால், மழை நீர் உள்ளிட்ட அனைத்து கழிவு நீரும் இதன் வழியாக செல்கிறது. ஆனால், ஈரோடு மாநகராட்சியில் கட்டப்படும் பாதாள சாக்கடை ‘செப்ரேட் சிஸ்டம்‘ முறையில் கட்டப்படுகிறது. இதன் வழியாக கழிவு நீர் மட்டுமே செல்ல முடியும். இதனால் மக்களுக்கு என்ன பயன்? என்பது கேள்வியாக உள்ளது.