தினமலர் 06.05.2010
உணவு பொருட்களில் கலப்படம்: உடுமலையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
உடுமலை : உடுமலையில், உணவுப்பொருட்களில் கலப்படம் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை குறித்து ஆர்.டி.ஓ., தலைமையில் சுகாதாரத்துறையினர் அதிரடி ஆய்வு நடத்தினர்.போலி மருந்துகளை தொடர்ந்து, உணவுப்பொருட்களிலும் கலப்படம் மற்றும் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்வதால் பொதுமக்கள் பாதித்து வருகின்றனர். மதுரையில் சுகாதாரமற்ற முறையில் தயாரித்த உணவு சாப்பிட்ட கல்லூரி மாணவர் இறந்தார்.
இதனையடுத்து, ஓட்டல்கள் மற்றும் கடைகளில் ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் நேற்று உடுமலை நகரம் மற்றும் கிராமங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். உடுமலை ஆர்.டி.ஓ., சோமசேகரன், உடுமலை தாசில்தார் சபாபதி, நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் காமராஜ், ராமகிருஷ்ணன், எரிசனம்பட்டி வட்டார ஆய்வாளர்கள் மூர்த்தி மற்றும் அதிகாரிகள் குழு கடைகளில் ஆய்வு செய்தது.
உடுமலை பஸ் ஸ்டாண்ட் கடைகளில் ஆய்வு செய்த போது, காலாவதியான குடிநீர், பால், மோர், தயிர், குளிர்பானங்கள் ஆகியவை விற்பனைக்காக இருந்தது. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்கள், டீத்தூள், வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்ட பட்டாணி, கடலை, கேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடைகளில் தரமான பொருட்கள் மட்டுமே விற்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
அதே போல், ஓட்டல்களில் உணவு தயாரிக்கும் இடம், பயன்படுத்தும் பாத்திரங்கள், பொருட்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து விற்க வேண்டும், காய்ச்சிய குடிநீர் வழங்க வேண்டும், பிளாஸ்டிக் பொருட்களில் சூடான உணவு பொருட்கள் அடைத்து விற்க கூடாது என அறிவுறுத்தினர். பல கடைகளில் சுகாதாரமற்ற முறையில் இருந்த உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். அதே போல், உடுமலை , மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களிலுள்ள கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தினர்.
அதிகாரிகள் கூறுகையில்,’ தரமான உணவு பொருட்கள் , சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய வேண்டும், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, தயாரிப்பு நிறுவனம், ‘பேட்ஜ்‘ எண் ஆகிய தகவல்கள் உள்ள உணவு பொருட்களை மட்டுமே வாங்கி விற்பனை செய்ய வேண்டும், உணவு பொருட்களால் பொதுமக்கள் பாதித்தால் விற்கும் கடைக்காரர்கள்தான் பொறுப்பு‘ என எச்சரிக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் அடிக்கடி ஆய்வு செய்யப்படும்‘ என்றனர்.