தினகரன் 21.05.2010
எரிவாயு தகனமேடை பணி எப்போது முடியும்
சீர்காழி, மே 21: சீர்காழி நகராட்சி ஈசானிய தெருவில் நிறைவடையாமல் உள்ள எரிவாயு தகனமேடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ள னர்.
சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஈசானிய தெரு, கோவிந்தராஜ் நகர், பன்னீர்செல்வம் நகர், பசுபதி நகர் ஆகிய பகுதிகளில் 10,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் புளிச்சக்காடு செல்லும் சாலையில் எல்லா மதத்தினருக்குமான 5 சுடுகாடுகள் அமைந்துள்ளது. இங்கு பிணம் எரிக்கும் போது புகை மண்டலம் எழும்புவதுடன் துர்நாற்றம் வீசுவதால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பகுதியில் எரிவாயு தகனமேடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து சீர்காழி நகராட்சி மூலம் ரூ.55 லட்சத்தில் ஈசானிய தெரு அருகில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. ஆனால் துவங்கப்பட்ட சில நாட்களிலேயே பணி நின்றுவிட்டது.
பணிகளை மீண்டும் தொடங்கி எரிவாயு தகன மேடையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி கவுன்சிலர் சேகர் கூறுகையில், 3 மாதங்களுக்கு முன் தொடங்கிய பணி முழுமைபெறாமல் பாதியிலேயே நிற்கிறது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. மழைக்காலம் தொடங்குவதற்குள் இந்த பணியை விரைந்து முடித்தால், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
நாடார் உறவு முறை தலைவர் தங்கவேல் கூறுகையில், ஈசானிய தெருவில் பொதுமக்கள் நலன் கருதி எரிவாயு தகனமேடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து தொடங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டு விட்ட பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொரு ளாளர் முசாகு தீன் கூறுகை யில், ஈசானிய தெரு அருகே எரிவாயு தகனமேடை பணி துவக்கப்பட்டவுடன் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். என்ன காரணத்தாலோ பணி முடியவில்லை. மக்கள் நலன் கருதி தகனமேடை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.