தினமலர் 06.03.2010
எரிவாயு மாயான பணியை பாதியில் விட்ட காண்ட்ராக்டர் மீது வழக்கு: திண்டுக்கல் நகராட்சி அதிரடி முடிவு
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் எரிவாயு மாயான பணியை எடுத்த காண்ட்ராக்டர் மீது நஷ்டஈடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர திண்டுக்கல் நகராட்சி முடிவு செய்துள்ளது.
திண்டுக்கல் நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
சந்திரசேகர்: திண்டுக்கல் வேடபட்டியில் எரிவாயு மாயானத்தை காண்ட்ராக்ட் எடுத்தவர் மூன்று ஆண்டுகளாக எந்த பணியும் செய்யவில்லை.ஜெயபாலன்: கடந்த 2007ல் காண்ட்ராக்ட் எடுத்தவர் மூன்று ஆண்டுகளாக பணிகளை செய்யாததால், மீண்டும் காண்ட்ராக்ட் விட்டால் பணியின் செலவுத்தொகை அதிகமாகும். அவர் எவ்வளவு பணி செய்தார். அவர் மீது ஏன் நாம் நடவடிக்கை எடுக்கவில்லை.
துணை தலைவர் கல்யாணசுந்தரம்: காண்ட்ராக்ட் எடுத்தவர்கள் வைப்பு தொகை வைக்க வேண்டும். தாமதத்திற்கு காரணம் என்ன.தலைவர் நடராஜன்: பழநியில் செயல்படும் எரிவாயு மாயானத்தை நாங்கள் பார்வையிட்டுள்ளோம். இதன் அடிப்படையில் வேடபட்டியில் மாயானம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பணி 60 லட்சம் ரூபாய்க்கு விடப்பட்டது.
தற்போது வரை 22 லட்சத்திற்கு செக் வழங்கப்பட்டுள்ளது. பணியின் தாமதத்தால் திண்டுக்கல் மக்களின் வரிபணம் விரையமானது குறித்தும், சம்பந்தப்பட்ட காண்ட்ராக்டர் மீது நஷ்டஈடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். இந்த வழக்கு தமிழகத்தில் முன்மாதிரியாக இருக்கும். இதனால் பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு புதிய ஒப்பந்தத்திற்கு நாம் ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.