தினமலர் 15.03.2010
ஏழைகளுக்கு ஊக்க உதவியுடன் வீட்டு வசதி கடன் வழங்கல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு வட்டி ஊக்க உதவியுடன் வீட்டுவசதி கடன் வழங்கப்படுகிறது.கலெக்டர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசு சார்பில் நகர் பகுதி மற்றும் டவுன் பஞ்சாயத்து பகுதி ஏழை மக்களுக்கு வட்டி ஊக்க உதவியுடன் கூடிய வீட்டு வசதி கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் குறைந்த வருவாய் பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் நகரம் மற்றும் டவுன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனக்கென்று சொந்த வீடு கட்டுவதற்கு தேவையான வட்டி ஊக்க உதவியுடனான கூடிய வீட்டு வசதி கடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கப்படும்.இந்த திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் மாத வருமானம் 5,000 ரூபாய்க்கு குறையாமலும், குறைந்த வருவாய் பிரிவினருக்கு மாத வருமானம் 5,000 முதல் 10,000 ஆயிரம் வரையில் இருக்க வேண்டும்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் 25 சதுர மீட்டர் பரப்புள்ள கொண்ட வீடு கட்ட ஒரு லட்ச ரூபாய் வரையிலும், குறைந்த வருவாய் பிரிவினர் 40 சதுர மீட்டர் பரப்புள்ள வீடு கட்டுவதற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரையிலும் கடன் பெறலாம்.கடன் பெற விரும்புவோர் நிலப்பட்டா மனுதாரரின் பெயரில் இருக்க வேண்டும். கடன்பெற நிலம் நகரம் மற்றும் டவுன் பஞ்சாயத்து பகுதியில் இருத்தல் வேண்டும். வருமான சான்றிதழ் தலைமையிட தாசில்தாரிடம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இருப்பிட சான்றிதழ், ரேஷன் கார்டு நகல் மற்றும் கலர் ஃபோட்டோவை இணைக்க வேண்டும்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகரம் மற்றும் டவுன் பஞ்சாயத்து பகுதியில் வசிப்போர் இந்த கடனை பெற செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி ஓசூர் வீட்டு வசதி பிரிவு ஆகியோரிடம் விண்ணப்பம் அளித்து கடன் பெறலாம்.