தினமணி 22.09.2010
ஒசூர் நகராட்சி எல்லை விரிவாக்கம்: ஆதரவும், எதிர்ப்பும்ஒசூர், செப். 21: ஒசூர் நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்வதற்கு ஊராட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. ஒசூர் நகராட்சியுடன் சூசூவாடி, ஆவலப்பள்ளி, மூக்கண்டப்பள்ளி, சென்னத்தூர் மற்றும் மத்திகிரி பேரூராட்சி ஆகிய 5 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து மாநகராட்சியாகத் தரம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனை வரவேற்று ஒசூர் நகரமன்றக் கூட்டத்தில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திகிரி பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இணைப்புக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. திமுக உறுப்பினர்கள் ஆதரவுடன் இணைக்கும் முடிவை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னத்தூர், ஆவளப்பள்ளி, மூக்கண்டப்பள்ளி, சூசூவாடி ஊராட்சி மன்றக் கூட்டங்களில் அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.