தினமணி 26.07.2010
ஒத்துழையுங்கள்; உறுதியளிக்கிறேன்: ஆட்சியர்
புதுக்கோட்டை, ஜூலை 25: புதுக்கோட்டை தெற்கு சந்தைப்பேட்டை தொண்டைமான் நகர் விரிவாக்கப் பகுதியில் கடந்த பல தலைமுறைகளாக வசித்துவரும் நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களிடையே மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்கள் குடியிருக்கும் - அரசுக்கு சொந்தமான இடத்தைக் காலி செய்து தரும் பட்சத்தில் உரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்து தருவதாக அவர் உறுதியளித்தார்.
புதுக்கோட்டை சந்தைப்பேட்டை தென்பகுதியில் உள்ள தொண்டைமான் நகர் விரிவாக்கப் பகுதியில், அருந்ததியர் மற்றும் காட்டுநாயக்கன் இனத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர்கள் குடும்பங்கள் வீடுகள் கட்டி வசித்துவருகின்றனர்.
இந்நிலையில, கடந்த 1995-ல் அப்போது மாநில அமைச்சராக இருந்த எஸ். ரகுபதி தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில், 216 பேருக்கு நத்தம் நிலவரித் திட்டத்தின் கீழ் மனை வரி தோராயப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால், சரிவர விவரம் தெரியாத காரணத்தால், அதை வீட்டு மனைப்பட்டாவாக வகை மாற்ற அனைவரும் தவறிவிட்டதால், வருவாய்த் துறை கணக்கில் ஏறாமல் போனது.
இதனால், தற்போது ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் இந்த இடத்தைக் காலிசெய்ய வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முயற்சிகள் தொடங்கின. ஆனால், இப்பகுதி மக்கள் அந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம், சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதைத் தொடர்ந்து சந்தை சீரமைப்புக் குழு இந்தப் பகுதியை மட்டும் காலி செய்வதைத் தவிர்க்கலாம் என முடிவெடுத்தது.
இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அப்பகுதிக்கு நேரில் சென்று மக்களிடம் பேசியது:
“”அரசு சட்டவிதிகளின்படி, இந்தக் குடியிருப்பை காலிசெய்ய நீதிமன்ற ஆணை பெறப்பட்டிருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் அனைவரும் இப்பகுதியிலேயே வசிக்க வேண்டும் என்பதால், காலிசெய்யும் நடவடிக்கையை எடுக்கவில்லை.
இந்தப் பிரச்னையில், ஆர்ப்பாட்டமின்றி அமைதியாகத் தீர்வு காண வேண்டும் என்பதே எனது எண்ணம்.
எனவே, குடிசை மாற்று வாரியத்தின் மூலம் மாதாந்திர சுலபத் தவணையில் வீடுகள் கட்டித் தரவும் மேலும் சமுதாயக் கூடம், தொடக்கப் பள்ளி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கித் தரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்புத் தர வேண்டும்” என்றார் அவர்.
ஆட்சியருடன் தமிழ்நாடு காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்தச் சங்க மாநிலப் பொருளர் ஏ. சின்னையா, மண்டலத் தலைவர் என். தீபாவளிராஜ், மண்டலச் செயலர் பொன்பாலமுத்து, மாவட்டத் தலைவர் ஏ. சிவகுமார், ஆலோசனைக்குழுத்தலைவர் சரவணன், வட்டாட்சியர் என். ஜானகி, வேளாண் வணிக துணை இயக்குநர் தி. தங்கவேலு, மாவட்ட ஊராட்சித் தலைவர் சி. முத்துச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்