தினமணி 20.08.2013
ஒரு வாரத்தில் பெங்களூர் மாநகராட்சி மேயர் தேர்தல்: கர்நாடக அமைச்சர்
இன்னும் ஒரு வாரத்தில் பெங்களூர் மாநகராட்சி மேயர் தேர்தல் நடைபெறும் என்று கர்நாடக மாநிலப் போக்குவரத்து மற்றும் பெங்களூர் மாநகரப் பொறுப்பு அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
பெங்களூரு – ஒசூர் சாலையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை சார்பில், ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்த பெண் பூஜா, சதீஷ் ஆகியோருக்கு அரசு சார்பில் திங்கள்கிழமை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஆதரவற்றோர்களுக்கு அரசு இதுபோல திருமணம் நடத்தி வைத்து, அவர்களுக்கு உதவித்தொகை அளிப்பதால், ஆதரவற்றவர்களை திருமணம் செய்து கொள்ள பலரும் முன்வருவார்கள். ஆதரவற்ற குழந்தைகளுக்கும் தங்களுக்கு யாருமில்லை என்ற குறையும் நீங்கும்.
ஆதரவற்ற பெண்கள், ஆண்களை திருமணம் செய்து கொள்ள முன்வருபவர்களுக்கு அரசு தேவையான உதவியை வழங்கும் என்றார் அவர்.
மேலும், மக்களவை இடைத்தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் சித்தராமையா ஈடுப்பட்டிருந்ததால், பெங்களூர் மாநகர மேயர் தேர்தலுக்கான ஆவணத்தில் கையெழுத்திடவில்லை.
திங்கள்கிழமை தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், அவர் செவ்வாய்க்கிழமை அந்த ஆவணத்தில் கையெழுத்திட வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து, இன்னும் ஒரு வாரத்தில் பெங்களூர் மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகளுக்கானத் தேர்தல் நடைபெறும் என்றார் அவர்.