தினமலர் 30.04.2010
ஓய்வூதிய பலன் உடன் வழங்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
தஞ்சாவூர்: ஓய்வூதிய தொகையை காலதாமதம் இன்றி பெற்று வழங்க வேண்டும் என்று கலெக்டர் சண்முகம் உத்தரவிட்டார்.தஞ்சையில் ஓய்வூதியதாரர்களின் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் ஓய்வூதிய இயக்குனர் கண்ணப்பன் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். கலெக்டர் சண்முகம் தலைமை வகித்து பேசியதாவது:அரசுத்துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களின் கோரிக்கைகளை குறிப்பாக ஓய்வூதியம் மற்றும் நிலுவைத் தொகைகளை காலதாமதம் இல்லாமல் சம்பந்தபட்ட அதிகாரிகள் பெற்று தர வேண்டும்.நகராட்சிகள், கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் மனுக்களே அதிகம் பெறப்பட்டுள்ளது. எனவே கல்வித்துறையைச் சேர்ந்த அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள் ஆகியோர் ஓய்வு பெற்றவர்களின் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை வரும் மே மாதம் நடக்கும் சிறப்பு ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.தகுதியான கோரிக்கைகள் குறித்து உரிய நிலுவைத் தொகைகள் முற்றிலும் வழங்கபட்டிருக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.டி.ஆர்.ஓ., கருணாகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.