தினமலர் 29.10.2010
கட்டடங்கள் கட்ட விதிக்கப்பட்டிருந்த தடைநீக்கம்
ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் நினைவிடத்தைச் சுற்றி, கட்டடங்கள் கட்ட விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டது, அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீபெரும்புதூர். இங்கு, முன்னாள் பிரதமர் ராஜிவ் மறைந்த இடத்தில், 21 கோடி ரூபாய் மதிப்பில், அழகிய புல்வெளியுடன் கூடிய நினைவு மண்டபம் கட்டப்பட்டது.ராஜிவ் நினைவிடத்திற்கு வந்து செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், நாடு முழுவதுமிருந்து காங்கிரஸ் கட்சியினர் வந்து செல்கின்றனர்.எனவே, நினைவிடத்தைச் சுற்றி கட்டடங்கள் எழுப்பப்பட்டால், நினைவிடம் பொலிவிழந்துவிடும் எனக் கருதி, நினைவிடத்தைச் சுற்றி 300 மீட்டர் சுற்றளவிற்கு கட்டடங்கள் கட்ட அனுமதி மறுக்கப்பட்டது.இப்பகுதியை, 2007ம் ஆண்டு வளர்ச்சியில்லாப் பகுதியாக அரசு அறிவித்தது.இப்பகுதியில், ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம், பாரதி நகர், அம்மன் அவென்யூ, மாதா நகர், கச்சிப்பட்டு, டி.கே.நாயுடு நகர் ஆகியவை உள்ளன.
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில் நாளுக்கு நாள் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகின்றன. அங்கு வேலையில் சேருபவர்கள், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் குடியேறி வருகின்றனர். இதனால், மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.இந்நிலையில், ராஜிவ் நினைவிடத்தைச் சுற்றி, 300 மீட்டர் சுற்றளவிற்கு கட்டடம் கட்டக்கூடாது என, அரசு தடை விதித்தது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.அரசு உத்தரவை எதிர்த்து, கோவர்த்தன நகரில் வீட்டு மனை வாங்கியவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கில் ஆஜரான தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல், தடையை முற்றிலும் நீக்காமல், சில விதிமுறைகளுடன் கட்டடங்கள் கட்ட அனுமதிக்கலாம் எனக் கருத்து தெரிவித்தார்.அதை ஏற்று, நகர் ஊரமைப்பு இயக்குனரகம் ராஜிவ் நினைவிடத்தைச் சுற்றி கட்டடங்கள் கட்ட விதிக்கப்பட்டிருந்த தடையை தளர்த்தியுள்ளது.நினைவிடத்தைச் சுற்றி, ஏழு மீட்டர் உயரத்திற்கு குடியிருப்பு கட்டடம் கட்ட அனுமதி அளித்துள்ளது. வணிக கட்டடம், சிறிய தொழிற்சாலைகள் போன்றவை கட்ட தடை விதித்துள்ளது.ராஜிவ் நினைவிடத்தைச் சுற்றி, 300 மீட்டர் சுற்றளவிற்கு குடியிருப்பு கட்டடம் கட்ட அரசு அனுமதி அளித்துள்ளது, அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.