தினமணி 25.01.2010
கட்டமைப்புப் பணிகளை ஒரு மாதம் முன்பே முடிக்க வேண்டும்
கோவை, ஜன.24: கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி அடிப்படை கட்டமைப்புப் பணிகளை ஒரு மாதத்துக்கு முன்பே முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை காலை கோவை வந்தார். விமான நிலையத்தில் இருந்து ரெசிடென்சி ஹோட்டலுக்குச் சென்ற அவர், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி நடக்கும் சாலைப் பணிகள் மற்றும் இதரப் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
இதற்குப் பதிலளித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியது: மாநாட்டையொட்டி, 96 கி.மீ. தூரத்துக்கு 17 சாலைகள் ரூ.60 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி சாலை விரிவுபடுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
மாநாடு நடக்கும்போது வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் நிறுத்துவதற்கு மாவட்ட எல்லையில் தாற்காலிக பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணிகள் விரைவில் துவங்கப்படும் என்றார்.
“சிறைச்சாலை வளாகத்தில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கு 50 ஏக்கர் நிலம் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறைச்சாலை வளாகத்தில் உள்ள கட்டடங்களை இடிப்பது தொடர்பாக அரசிடம் தெரிவித்து, இதர நிலங்களும் பூங்காவில் சேர்க்கப்படும்’ என்றார் மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத்.
“மாநகராட்சி சார்பில் மேட்டுப்பாளையம் சாலையில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இப் பணிகள் விரைவில் முடிவடையும். அதன்பின், காந்திபுரம் பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும்.
அவிநாசி சாலையின் இருபுறமும் நடைபாதை அமைக்கும் பணி துவங்கி உள்ளது. மொத்தம் 28 கோபுர விளக்குகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள அனைத்துப் பூங்காக்களையும் அழகுபடுத்தும் பணி துவங்கி உள்ளது‘ என்றார் மேயர் ஆர்.வெங்கடாசலம்.
மாநாட்டையொட்டி, தண்ணீர் அதிகளவில் தேவைப்படும். ஆகவே, வடவள்ளி, கவுண்டம்பாளையம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என மு.க.ஸ்டாலின் கேட்டார்.
இதற்கு மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத் அளித்த பதில்: வடவள்ளி, கவுண்டம்பாளையம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் 85 சதவிகித பணிகள் நிறைவடைந்தன. நெல்லித்துறையில் இருந்து 6 கி.மீ. தூரம் உள்ள செல்லப்பனூர் நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. இப் பணிகள் மார்ச் 31}ம் தேதிக்குள் முடியும்.
கொடிசியா வளாக அரங்கில் 20}க்கும் மேற்பட்ட ஆய்வரகங்கள் நடைபெற உள்ளது. ஒரு அரங்கில் இருந்து மறு அரங்கிற்கு அறிஞர்கள் செல்வதற்கு மூடிய நடைபாதை அமைக்கப்படுகிறது. மேலும், கொடிசியா சாலைக்கு அருகே உள்ள பள்ளமான இடத்தை மணல் போட்டு மூட பொதுப்பணித் துறைக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
ஹோப்காலேஜ் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. கோவை ரயில் நிலையத்தில் ரூ.7 கோடி செலவில் சப்வே அமைக்கும் பணிக்கு இடம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.
அவிநாசி சாலை, திருச்சி சாலையில் ரூ.55 கோடி மதிப்பில் தரைக்கடியில் கேபிள் வழியாக மின்வயர்கள் அமைக்கும் பணிகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது என்றார்.மாநாட்டையொட்டி, அடிப்படை கட்டமைப்புப் பணிகள் உள்பட அனைத்துப் பணிகளையும் ஒரு மாதத்துக்கு முன்பே முடிக்க அதிகாரிகளுக்கு, துணை முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.