தினமலர் 18.05.2010
கம்பம் நகராட்சி தெருவிற்கு பூட்டு: அகற்றிய அதிகாரிகள்
கம்பம் : கம்பத்தில் நகராட்சியில் தெரு ஒன்றை மறைத்து கேட் அமைத்து பூட்டு போடப்பட்டிருந்தது. இதையறிந்த அதிகாரிகள் ஆக்கிரமிப்புக்களை முழுமையாக அகற்றினர்.
கம்பம்மெட்டு செல் லும் ரோட்டில் உள்ள தங்கும் விடுதி அருகே மக்கள் நடந்து செல்லும் வகையில் வீதி உள்ளது. இந்த வீதியை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்பு செய்தது மட்டுமல்லாமல், பெரிய மெகா சைஸ் கேட் அமைத்து, பூட்டு போட்டு, பொதுமக்கள் நடப்பதை தடை செய்துள்ளனர். இது தொடர்பாக புகார்கள் கம் பம் நகராட்சிக்கு வந்தது.
நேற்று காலை நகராட்சி கமிஷனர் அய்யப்பன் தலைமையில், நகரமைப்பு ஆய்வாளர் தங்கராஜ், ஓவர்சீயர் பன்னீர்செல்வம் ஆகியோர் கொண்ட நகராட்சி அலுவலர்கள் கம்பம்மெட்டு ரோட்டில், தெருவை மறைத்து போடப்பட்டிருந்த ஆக்கிரமிப்பை அகற்றினர். அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எஸ்.ஐ., தர்மராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போடப்பட்டிருந்த கேட் அப்புறப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, வீதி திறந்து விடப்பட்டது. தொடர்ந்து போலீஸ் குடியிருப்பு கீழ்புறம் ரோட்டில் காம்பவுண்ட் அமைக்கப்பட்டிருந்ததையும் நகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.