மாலை மலர் 28.07.2009
கருமத்தம்பட்டியில் குடிதண்ணீர் திருட்டை தடுக்க பேரூராட்சி அதிரடி நடவடிக்கை
இருகூர், ஜூலை. 28-
கருமத்தம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கு சரியாக குடிநீர் வருவதில்லை. சிலர் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுகிறார்கள் என்று புகார்கள் வந்து குவிந்தன. குடிநீர் திருட்டை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் பலமுறை எச்சரித்தும் பலன் இல்லை. இதைத் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.
அனைத்து வார்டுகளிலும் உள்ள குடிநீர் இணைப்பு களில் “”ப்ளோ–அப் கண்ட்ரோல் வால்வு“” பொருத்தப்பட்டது. பிரதான குடிநீர் குழாயில் இருந்து வீட்டு இணைப்புக்கு செல்லும் வழியில் இந்த வால்வு பொருத்தப்பட்டுள்ளது.
இதனால் குடிநீர் அதிக அழுத்தத்தில் செல்லாது. சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்கும். மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் வால்விலுள்ள குண்டு குழாயை அடைத்து இணைப்பு தானாக துண்டிக்கப்படும்.
பேரூராட்சி நிர்வாகம் இதனை சரி செய்தால் மட்டுமே மீண்டும் குடிநீர் கிடைக்கும். இந்த வால்வுகள் இணைப்புத்தாரரின் செலவிலேயே பேரூராட்சி நிர்வாகம் பொருத்தி வருகிறது.
வால்வு பொருத்தப்படாத இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படும் என்று கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் மகாலிங்கம், செயல் அலுவலர் தண்டபாணி ஆகியோர் எச்சரித்துள்ளனர்.