தினமலர் 13.09.2010
கரூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தஅரசுக்கு செயற்குறிப்பு அளிக்க முடிவு
கரூர்: கரூர் நகராட்சியுடன், அருகிலுள்ள இனாம் கரூர் மற்றும் தாந்தோணி நகராட்சி, சணப்பிரட்டி பஞ்சாயத்தை சேர்த்து, கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்த, அரசுக்கு செயற்குறிப்பு அனுப்ப கரூர் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.உள்ளாட்சி அமைப்புகளின் நிலை உயர்த்துதல், சேர்த்தல் தொடர்பான நடைமுறை பற்றிய அரசு ஆணையில், ஒரு நகராட்சியை முழுவதாகவோ, அதன் ஒரு பகுதியையோ, அருகிலுள்ள நகராட்சி, பஞ்சாயத்துகளையோ இணைத்து மாநகராட்சியாக உருவாக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது, கரூர் மாவட்டத்தில் வளர்ச்சிப்பணி மற்றும் அடிப்படை கட்டமைப்பு பணி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நகராட்சிகளின் தரம் உயர்த்தல் பற்றி அரசுக்கு செயற்குறிப்பு அளிக்க கலெக்டர் மூலமாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.சம்மந்தப்பட்ட உள்ளாட்சியின் மக்கள் தொகை அடர்த்தி, தனிநபர் வருவாய், விவசாயிகளின் சதவீதம், உள்ளாட்சி ஆண்டு வருமானம் கணக்கிட்டு, இணக்க வேண்டிய உள்ளாட்சி குறித்து அரசுக்கு செயற்குறிப்பு கோரப்பட்டிருந்தது.இனாம் கரூர் நகராட்சி (தேர்வு நிலை) 13.5 சதுர கி.மீ., தாந்தோணி நகராட்சி (முதல்நிலை) 26.63 சதுர கி.மீ., சணப்பிரட்டி பஞ்சாயத்து 5.58 சதுர கி.மீ., ஆகியவற்றை கரூர் நகராட்சியுடன் இணைத்து, “கரூர் மாநகராட்சியாக‘ தரம் உயர்த்த அரசுக்கு செயற்குறிப்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு, சேர்க்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளிலும் தீர்மானம் நிறைவேற்றி அளிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.இத்திட்டம் குறித்து அவசர தீர்மானம் நிறைவேற்றிட, கரூர் நகராட்சியில் வரும் 13ம் தேதி அவசர கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.