தினமலர் 03.09.2010
களக்காடு பகுதி அனைத்து வீடுகளுக்கும் பிளாஸ்டிக் குப்பை தொட்டி
களக்காடு: களக்காடு டவுன் பஞ்.,சில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் கடைகளுக்கும் இலவசமாக குப்பை கொட்டுவதற்கு பிளாஸ்டிக் குப்பை தொட்டி வழங்கப்பட உள்ளதாக தலைவர் முத்துகிருஷ்ணன் தெரிவித்தார்.
களக்காடு டவுன் பஞ்., கூட்டம் தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் முருகன், துணைத் தலைவர் ராஜன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் காந்தி, பொன்னுசாமி, தேவசகாயம், கனகராஜ், ருக்மணி, லெட்சுமி, செல்வி, விமல், பிரேமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 13வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் டவுன் பஞ்.,சில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் கடைகளுக்கு இலவசமாக குப்பைகளை கொட்டுவதற்கு பிளாஸ்டிக் குப்பை தொட்டி வழங்க தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: காந்தி: களக்காடு காந்தி சிலையை சுற்றியுள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும். குப்பை அள்ளும் தொட்டி ஆட்டோக்களை எல்லா பகுதிகளுக்கும் அனுப்ப வேண்டும். பொன்னுசாமி: நான்குநேரியான் காலில் உள்ள அமலை செடிகளை அகற்ற வேண்டும். தேவசகாயம்: எல்லா வார்டுகளுக்கும் அடிபம்பு போட வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.