தினகரன் 31.08.2010
கழிவில்லா நகரம்
மாநகரில் தொழிற்சாலை மற்றும் பொதுமக்களால் ஏற்படும் திட கழிவுகளை வெளியேற்றுவது மாநகராட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது. தனியார் ஒத்துழைப்புடன் கழிவுகளை அகற்ற புதிய டெண்டர் விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக பெங்களூர் மாநகரை ‘கழிவுகள் இல்லாத நகரம்‘ என்ற நிலைக்கு கொண்டுவர காந்திநகர், ராஜாஜிநகர், மகாலட்சுமி லே அவுட், மல்லேஷ்வரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் முதல் கட்டமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பலன் கிடைக்கும் பட்சத்தில் மற்ற பேரவை தொகுதியில் செயல்படுத்தப்படும்.
மல்லேஷ்வரம் மார்கெட்டில் பசுமை கழிவுகள் வெளியேற்றும் திட்டம் நல்ல பலன் கொடுத்துள்ளதை தொடர்ந்து, கே.ஆர்.மார்கெட் மற்றும் மடிவாள மார்கெட்டில் நடப்பு நிதியாண்டில் செயல்படுத்தப்படும். மேலும் வார்டுகளில் எளிதில் மக்கி போகும் பொருட்களை சேமிக்க ஒரு திட்டமும், எளிதில் மக்காமல் இருக்கும் பொருட்களை சேமிக்க மற்றொரு திட்டம் செயல்படுத்தப்படும். இதில் எளிதில் மட்கும் பொருளை உரமாக மாற்றம் மையத்தின் மூலம் தோட்டக்கலைக்கு பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும். திடக்கழிவு அகற்றல் மற்றும் புனர் பயன்பாட்டிற்கு 13வது நிதி ஆணையம் ரூ.40 கோடி மானியம் வழங்கியுள்ளதை பயன்படுத்தி கொள்ளப்படும்.