தினமலர் 15.04.2010
கவுண்டம்பாளையம் – வடவள்ளி குடிநீர் திட்ட வெள்ளோட்டம்
பேரூர் :வடவள்ளி, கவுண்டம்பாளையம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கான சோதனை நீர் ஓட்டம் துவங்கியது.வடவள்ளி பேரூராட்சி மற்றும் கவுண்டம்பாளையம் நகராட்சிகளின் மக்கள்தொகை 72 ஆயிரம்.இரு பேரூராட்சியிலும் தனிநபர் ஒருவருக்கு 31 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதை 70 லிட்டராக உயர்த்த புதிய கூட்டுகுடிநீர் திட்டம் துவக்கப் பட்டது. ரூ. 29 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில்நுட்பத்தில் செயல்படுத்த திட்டமிட்டனர். பணிகள் 2007ம் ஆண்டு பிப்., 24ல் துவங்கியது.பவானி ஆற்றிலிருந்து நெல்லித்துறையில் நீர் சேகரிப்பு தொட்டி அமைத்தனர். இங்கிருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள செல்லப்பனூர் சுத்திகரிப்பு நிலையம் கொண்டு செல்லப்பட்டு, தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குழாய்கள் மூலம் 14.40 கி.மீ தூரத்திலுள்ள நெ.4 வீரபாண்டி பிரிவிலுள்ள நீர்சேகரிப்பு தொட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து மீண்டும் 15.55 தூரத் தில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டம் பாளையம் நீர்சேகரிப்பு தொட்டிக்கு வந்து சேரும். கவுண்டம்பாளையத்தில் உள்ள 11 மேல்நிலை நீர்த்தேக் கத்தொட்டிகள் மற்றும் வடவள்ளி பேரூராட்சியில் எட்டு மேல்நிலைத்தொட்டிகளுக்கும் மற்றும் ஏற்கனவே கல்வீரம்பாளையத்தில் பயனில் உள்ள நீர்சேகரிப்பு தொட்டிக்கும் நீர் ஏற்றப்படும். இரு பேரூராட்சிக்கு தேவையான குடிநீர் அந்தந்த மேல்நிலைத்தொட்டிகளிலிருந்து 37.61 கி.மீ பகிர்மான குழாய்கள் மற்றும் பயனில் உள்ள பகிர்மான குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட் டுள்ளது. தற்போது இத்திட்டப்பணிகள் 96 சதவீதம் முடிக்கப்பட்டு, இரு பேரூராட்சிகளுக்கும் தண்ணீர் வினியோகிக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.பவானி ஆற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர், குழாய் மூலம் சோதனை ஓட்டமாக கவுண்டம்பாளையம் வந்து சேர்ந்தது. ஓரிரு வாரங்களில் இக்குடிநீர் திட்டம், இரு பேரூராட்சிகளுக்கும் முழுமையான பயன்பாட்டுக்கு வரும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். நீண்டநாள் கோரிக்கை முடிவுக்கு வந்துள்ளதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பவானி ஆற்றிலிருந்து சோதனை ஓட்டமாக வந்த தண்ணீரை, வடவள்ளி பேரூராட்சி முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம், பேரூராட்சி துணைத்தலைவர் சிவசாமி, கவுண் டம்பாளையம் நகராட்சி தலைவர் சுந்தரம் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் பார்வையிட்டனர்.