தினகரன் 27.05.2010
கவுன்சிலர்கள் கேள்வி பெங்களூர் மாநகராட்சி நிலைக் குழு நியமனம்?
பெங்களூர், மே 27: மாநகராட்சி மேயர் பதவி ஏற்று ஒரு மாதம் முடிந்துவிட்டபோதும், நிலைக்குழு அமைக்கப்படவில்லை என்பதால் மாநாகராட்சி கவுன்சில் இன்னும் நிறைவுபெறவில்லை என கவுன்சிலர்கள் புகார் கூறியுள்ளனர். கர்நாடக நகராட்சி சட்டத்தின்படி நிலைக்குழு அமைக்கப்படாமல் முக்கிய முடிவுகளை கவுன்சில் கூட்டத்தில் எடுக்கமுடியாது. இதனால் தான் மாநகராட்சி பட்ஜெட்டும் நிலுவையில் உள்ளது.
இது குறித்து மேயர் நடராஜ் கூறியதாவது: நிலைக்குழு அமைப்பதற்கு இன்னும் ஒருமாத காலம் ஆகும். இதற்கான செயல் திட்டம் அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளோம். ஏற்கனவே இருந்த 8 நிலைக்குழுவை 12 ஆக நீட்டித்துள்ளோம். இதற்கான அனுமதி கிடைக்கவேண்டும் என்றார்.பெங்களூர் பொறுப்பு அமைச்சர் அசோக் கூறுகையில், நிலைக்குழு அமைப்பதில் தாமதம் ஏற்படவில்லை. நிலைக்குழு அமைப்பதற்கான விதிகளை சட்டத்துறை வகுத்துவருகிறது. இன்னும் 15 நாட்களில் நிலைக்குழு அமைக் கப்படும் என்றார். இதற்கிடையே மாநகராட்சி கவுன்சில் அமைச்சரவை ஒப்புதலுக்காக காத்திருப்பதாக கூறினாலும், நகரவளர்ச்சி துறையிடமிருந்து இந்த கோப்பு அமைச்சரவைக்கு சென்று சேரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மே28&29 ஆகிய இரு நாட்கள் மாநகராட்சி கவுன்சில் கூடுகிறது. ஆனால் நிலைக்குழு அமைக்கப்படாமல் எப்படி திட்டங்களை நிறைவேற்றுவது என்று கவுன்சிலர்கள் கேட்கின்றனர். இது அரசின் தோல்வியை காட்டுகிறது. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று கவுன்சில் எதிர்க்கட்சி தலைவர் நாகராஜ் தெரிவித்தார்.