தினமலர் 09.04.2010
காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்: கூடலூர் நகரில் அதிகாரிகள் அதிரடி
கூடலூர்: கூடலூர் பகுதியில், மாவட்ட வருவாய் துறை மற்றும் சுகாதாரத் துறையினர் நடத்திய திடீர் ஆய்வில், காலாவதியான பொருட்கள், வாகனங்களுக்கு காஸ் நிரப்ப பயன்படும் மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டது. கூடலூர் பகுதியிலுள்ள கடைகளில், காலாவதியான உணவுப் பொருட்கள், மருந்துகள் விற்பனை செய்வதாகவும், அனுமதியின்றி காஸ் சிலிண்டர் பயன்படுத்தி ஆட்டோ இயக்குவதாகவும் வருவாய் துறைக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் உத்தரவின் படி, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சம்பத் தலைமையில், கூடலூர் ஆர்.டி.ஒ., ஹரிகிருஷ்ணன், சுகாதாரத் துறை துணை இயக்குர் நேர்முக உதவியாளர் ராஜசேகர், கூடலூர் வட்ட வழங்கல் அலுவலர் (பொ) ராஜேந்திரன், மோட்டார் வாகன ஆய்வாளர், நெலாக்கோட்டை வட்டார ஆரம்ப சுகாதார ஆய்வாளர் ரவி, ஓவேலி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் மோகன், கூடலூர் நகராட்சி ஆய்வாளர் கக்கமல்லன், வருவாய் ஆய்வாளர்கள் கந்தசாமி, ராமசாமி, ரமேஷ் அடங்கிய குழுவினர், நேற்று கூடலூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
குழுவினர் மூன்று பிரிவாக ஆய்வு மேற்கொண்டனர்; ஆய்வில், மளிகைக் கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள், குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள், மருந்துகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். அனுமதியின்றி காஸ் சிலிண்டர் பயன்படுத்தி இயக்கிய இரண்டு ஆட்டோக்கள், 8 சிலிண்டர்கள், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே கோர்ட் சாலையில், இரு வீடுகளில் விற்பனைக்கு வைத்திருந்த 73 லிட்டர் கெரசினை பறிமுதல் செய்தனர்.
துப்புக்குட்டி பேட்டை கல்குவாரி பகுதி வீட்டில், சமையலுக்கு பயன்படுத்தும் சிலிண்டரிலிருந்து, வாகன சிலிண்டருக்கு காஸ் நிரப்பும் மோட்டார் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. முதுமலை தெப்பக்காடு பகுதியில் கர்நாடகாவுக்கு கடத்தயிருந்த 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர். காலாவதியான மளிகைப் பொருட்கள் வைத்திருந்தது தொடர்பாக 2,000, பொது இடத்தில் புகைத்தது தொடர்பாக 400 ரூபாய் அபராதம் விதித்தனர். ”அதிரடி நடவடிக்கை தொடரும்,” என, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சம்பத் தெரிவித்தார்.