தினகரன் 08.09.2010
காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் முழுமை பெறவில்லை திட்டக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
ராமநாதபுரம், செப். 8: ராமநாதபுரம் மாவட்ட திட்டக்குழு கூட்டம் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி தலைமை யில் நடைபெற்றது. துணைத் தலைவர் அப்துல் லத்தீப், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆனந்த் ராஜ், மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் பேபி எபினேசர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அந்தந்த துறையினர் முறை யாக செயல்படுத்தி வருகிறார்களா என விவாதிக்கப்பட்டது.
மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பேசுகையில்,“தங்கச்சிமடம் புனித யாகப்பா உயர்நிலை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட மத்திய அமைச்சர் வாசன் எம்.பி., நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணி இன் னும் முடியாமல் உள்ளது. மாவட்டத்தில் பல அங்கன்வாடி மையங்கள், சத் துணவு கூடங்கள் பழுதடைந்துள்ளதாக கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றனர். அதை சரி செய்ய வேண்டும்’’ என்றார்.
திட்ட இயக்குநர் பேசு கையில்,“பஞ்சாயத்து யூனி யன் துவக்கப்பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள் பழுது நீக்கப்பட்டு வருகிறது. பஞ்சாயத்து யூனியன் கண்மாய்களை தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 80 கோடியில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. பொதுப்பணித்துறை கண்மாய்களின் வரத்துக் கால்வாய்களையும் தூர்வார நிதி ஒதுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் சம்பத் பேசு கையில், “தமிழக அரசு ரூ.616 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி உள்ளது. ஆனால் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்க வில்லை. அதிகாரிகள் மெத்தனமான செயல்படுகின்றனர்’’ என்றார். இதே போன்று மாவட்ட கவுன்சிலர்கள் முத்துராமலிங்கம், ரவி, பத்மினி, மணிமுத்தரசி ஆகியோர் காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தங் கள் பகுதி கிராமங்களுக்கு முறையாக குடிநீர் சப்ளை செய்யவில்லை என்றனர்.
காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து கூறுகையில், “மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 2,132 குடியிருப்புகளுக்கு காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 142 குடியிருப்புகளுக்கு மட்டும் சரியாக குடிநீர் சப்ளை செய்ய முடியவில்லை. இதற்காக 10 கிராமங்களுக்கு ஒரு சம்ப் (குடிநீர் தேக்கம்) கட்ட திட்டம் தயார் செய்யப்பட்டு, ரூ. 2 கோடியில் பணி கள் நடைபெற உள்ளன. இப்பணிகள் நவம்பருக்குள் முடிந்து, மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் சப்ளை செய்யப்படும்’’ என்றார். பரமக்குடி நகராட்சிக்கு தினமும் 33 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்வதாக உதவி செயற்பொறியாளர் பழனிச்சாமி தெரிவித்தார். இது பொய் யான தகவல் என்றும், பரமக்குடி நகராட்சியில் எந்தப் பகுதிக்கும் தண்ணீர் சப்ளை செய்யப்படவில்லை என்றும் கவுன்சிலர் சம்பத் தெரிவித்தார்.