தினமலர் 02.03.2010
கி.கிரியில் ஆக்கிரமிப்பு அதிரடி அகற்றம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன.
கிருஷ்ணகிரி நகரின் முக்கிய சாலையான ரவுண்டானாவில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் நேற்று முன்தினம் அ.தி.மு.க., வினர் கட்சி கொடி கம்பம் அமைத்தனர். இதற்கு மற்ற கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதால், கட்சி கொடி வைக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அ.தி.மு.க., வினர் கொடி கம்பம் நட்டதால், அதே பகுதியில் தி.மு.க., – காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சினரும் திடீரென கட்சி கொடி கம்பங்களை அமைத்தனர். இதனால், ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து கட்சி கொடிகள் அனைத்தையும் நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தினர்.
நெடுஞ்சாலைதுறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நேற்று காலை 11 மணிக்கு போலீஸாரின் துணையோடு நகரின் முக்கிய சாலைகளான சென்னை சாலை, பெங்களூரு சாலை, சப்–ஜெயில் ரோடு, குப்பம் ரோடு ஆகிய பகுதிகளில் சாலைகளில் ஆக்கிமித்து கட்டி வைக்கப்பட்டிருந்த கடைகளை அப்புறப்படுத்தினர். மேலும், ரவுண்டானா பூங்கா பகுதியில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலத்தில் அதிக அளவில் பழக்கடைகள், பூக்கடைகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த கடைகளையும் அதிகாரிகள் அகற்றினர். பூ மற்றும் பழக்கடைகளை அகற்றும் போது அதிகாரிகளுக்கும், கடைகாரர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இதானால் நகரில் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி நகரின் முக்கிய சாலைகளான பெங்களூரு சாலை, சென்னை சாலை மற்றும் சேலம் சாலை ஆகியவற்றின் இரண்டு புறங்களிலும் நடைபாதை அமைக்க கடந்த ஓராண்டுக்கு முன் அந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். ஆனால் ஒரு வார காலத்துக்குள் ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் தங்கள் கடைகளின் முன் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தனர். இதனால் நடைபாதை அமைக்கும் திட்டம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.
தற்போது, “அதிரடியாக அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு பகுதியில் மீண்டும் முளைக்காமல் இருக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.