தினகரன் 30.06.2010
குடிநீரில் அசுத்தம் என புகார் சுகவனேஸ்வரர் கோயிலில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை
சேலம், ஜூன் 30: சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் நேற்று மாலை திடீரென ஆய்வு நடத்திய அதிகாரிகள், பக்தர்களுக்காக வைக்கப்பட்டிருந்த குடிநீரில் அசுத்தம் கலந்திருப்பதை கண்டு, நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதையும் நிர்வாகத்தினர் செய்து தரவில்லை என்றும், இதே போல் குடிநீர் மிகவும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், இந்து சமய அறநிலையத்துறை உயர்அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் கோயிலில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய, அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை மாவட்ட வருவாய் அலுவலர் கலையரசி உத்தரவின் பேரில், வருவாய் கோட்டாட்சியர் குழந்தைவேலு, தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரிய நீர்பகுப்பு ஆய்வாளர் சிவஞானம் மற்றும் அதிகாரிகள், சுகவனேஸ்வரர் கோயிலில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, கோயில் பிரகாரம், மடப்பள்ளி போன்றவற்றை பராமரிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.
மேலும் மடப்பள்ளி அருகே பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 150 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் கூலரை சோதனையிட்டனர். அப்போது வாட்டர் கூலரின் பின்பகுதி துருப்பிடித்து சிதைந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் அதற்குள் இருந்த நீரும் தூசுபடிந்து அசுத்தமாக காணப்பட்டது. இதையடுத்து கோயில் நிர்வாகிகளை எச்சரித்த அதிகாரிகள், நீரை பரிசோதனைக்காக எடுத்துச்சென்றனர். ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் சுகவனேஸ்வரர் கோயிலில் அதிகாரிகள் திடீரென ஆய்வு நடத்தியது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசு உத்தரவுப்படி நடவடிக்கை
சுகவனேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் குடிப்பதற்காக நீர்ஊற்றி வைத்திருந்த வாட்டர் கூலர், துருப்பிடித்து சிதைந்த நிலையில் இருந்ததும், அதற்குள் இருந்த நீர் மாசுபடிந்து அசுத்தமாக காணப்பட்டதும் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஒரு லிட்டர் நீரை, நீர்பகுப்பு அதிகாரிகள் சோதனைக்காக எடுத்துச்சென்றனர். ‘‘இந்தநீரை சென்னையில் உள்ள நீர்பகுப்பாய்வு நிலையத்திற்கு அனுப்பிவைத்து, தரம் அறியப்படும். இதன்பிறகு மாசுபடிந்த நீரை பக்தர்களுக்கு வழங்கியது குறித்து, அரசு உத்தரவுப்படி உரியநடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.