தினமலர் 24.02.2010
குடிநீரில் ப்ளோரைடு பாதிப்பால் நோய் அதிகரிப்பு: அமைச்சர் தகவல்
கிருஷ்ணகிரி: “”தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீரில் ப்ளோரைடு பாதிப்பால் அதிக நோய் தாக்கி வருகிறது, ” என, தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்தார். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கலைஞர் காப்பீடு திட்ட மண்டல ஆய்வு கூட்டம் நடந்தது. மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசியதாவது: உயிர் காக்கும் உயர் சிகிச்சை காப்பீடு திட்டத்துக்கு மாவட்ட கலெக்டர்கள் முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும். ஏழை, எளிய மக்களை திட்டம் குறித்த தகவல்கள் சென்றடைய சுகாதார துறை இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் மற்றும் பணியாளர்கள் திறமையாக பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் உள்ள 5, 536 ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பான மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது. வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ், ஒரு கோடியே 32 லட்சம் மக்கள் பயன் பெற்றுள்ளனர். இருதயம், சிறுநீரகம், எலும்பு மற்றும் மூளை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்க முடியாத நிலையில், அவர்களுக்கு உயர் சிகிச்சை காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற பரிந்துரை செய்யலாம். காப்பீடு திட்டத்தில் இது வரை 41,920 பேருக்கு அறுவை சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். இதற்காக, 135 கோடியே 53 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவதில் கோவை மாவட்டம் முதலிடத்திலும், சேலம் மாவட்டம் இரண்டாம் இடத்திலும், திணடுக்கல் மாவட்டம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் ஒரு கோடி 44 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்து, அடையாள அட்டைகள் பெற்றுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 500 குடும்பங்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 945 குடும்பங்களும், சேலம் மாவட்டத்தில் 7 லட்சத்து 31 ஆயிரத்து 645 குடும்பங்களும் பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 595 குடும்பங்களும், வேலூர் மாவட்டத்தில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 418 குடும்பங்களும் பதிவு செய்துள்ளனர். காப்பீடு திட்ட பயனாளிகளை பதிவு செய்வதில், வேலூர் மாவட்டம் 113 சதமும், சேலம் மாவட்டம் 109, கிருஷ்ணகிரி மாவட்டம் 108, தர்மபுரி மாவட்டம் 70, திருவண்ணாமலை மாவட்டம் 68 சதம் பணிகள் முடித்துள்ளனர். காப்பீடு திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் 2,545 பேர் 9 கோடியே 34 லட்சத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயிரத்து 144 பேர் 5 கோடியே 13 லட்சத்திலும், வேலூர் மாவட்டத்தில் 931 பேர் 4 கோடியே 64 லட்சத்திலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 685 பேர் இரண்டு கோடியே 90 லட்சத்திலும், தர்மபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 96 பேர் 4 கோடியே 48 லட்சத்திலும் பயன் பெற்றுள்ளனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குடிநீரில் ப்ளோரைடு பாதிப்பால் கை, கால் வளைந்தும், மூடடு வலி, பல் வியாதிகள் அதிகளவில் வருகிறது. இதற்காக சுத்தமான குடிநீர் வழங்க ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.