தினமணி 30.11.2010
குடிநீரைக் காய்ச்சிக் குடிக்க நகராட்சி வலியுறுத்தல்
ஒட்டன்சத்திரம், நவ. 29: தொடர் மழை காரணமாக, ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரை, பொதுமக்கள் கொதிக்க வைத்து பருகுமாறு, நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதிக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது பரப்பலாறு அணை. இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் டீ கடை, உணவு விடுதிகள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் கொதிக்க வைத்த குடிநீரையே பருக வேண்டும். மேலும், வீடுகளிலும் குடிநீரை கொதிக்க வைத்து பருகவேண்டும்.
தொடர்ந்து, நகராட்சி அலுவலகப் பணியாளர்கள், பொது சுகாதாரப் பணியாளர்கள், குடிநீர் விநியோகிக்கும் பணியாளர்கள் மற்றும் தெருவிளக்கு பணியாளர்கள் விடுப்பில் செல்லாமல், வார்டு பகுதிகளில் மழை காரணமாய் ஏற்படும் பாதிப்புகளை நேரடியாக கண்காணித்து சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
வாய்க்கால்களில் தேங்கும் கழிவு நீரை அடைப்பு ஏற்படாமல் உடனடியாக அப்புறப்படுத்தவும், மழை நீர் சாலைகளில் தேங்காதவாறு வாய்க்கால் அமைத்து தண்ணீரை அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழை காரணமாக ஏற்படும் இடர்பாடுகளை உடனடியாக சரிசெய்ய, பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.