குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்
நகராட்சிப் பகுதியில் விநியோகிக்கும் குடிநீரை காய்ச்சி குடிக்குமாறு சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துவிட்டது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு 200 கனஅடியாக குறைந்துவிட்டதால் ஆற்றில் தண்ணீர் தேங்கி உள்ளது. ஆற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சி எடுத்து நகராட்சி குடிநீர் தொட்டியில் நிரப்பபட்டு, அதனை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் தண்ணீரை நன்றாக காய்ச்சி குடிக்குமாறு நகராட்சி சுகாதாரத் துறை பரிந்துரை செய்துள்ளது.
பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துபோன நிலையிலும் சத்தி நகராட்சி மட்டுமே தினமும் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தண்ணீர் எடுக்கும் ஆற்றுப்பகுதி தற்போது சுத்தம் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.