குடிநீர் ஆதாரத்தை ஏற்படுத்த நடவடிக்கை தேவை: நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
விருதுநகர் நகராட்சியில் கோடைகாலத்தைச் சமாளிக்க குடிநீர் ஆதாரத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
விருதுநகர் நகராட்சிக் குழு கூட்டம் அதன் கூட்டரங்கில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு நகராட்சித் தலைவர் மா. சாந்தி தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சேர்மக்கனி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்களிடையே நடைபெற்ற விவாதத்தின் விபரம் வருமாறு:
விருதுநகர் நகராட்சியில் ஆனைக்குட்டம் அணை, ஓண்டிப்புலி கல் கிடங்கு மற்றும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் மூலம் வாரத்திற்கு ஒரு முறை 3 மணி நேரம் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இரண்டு மணி நேரமாக குறைந்துள்ளது.
அதனால், கோடைக்காலத்தைச் சமாளிக்க நீர் ஆதாரத்தை ஏற்படுத்த வேண்டும். நகராட்சி வார்டு பகுதிகளில் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் மராமத்துப் பணிகள் செய்யப்படாமல் இருக்கின்றன.
இப்பகுதியில் பாதாளச் சாக்கடை பணிகள் இன்னும் முடிவடையாமல் தாமதமாகிக் கொண்டே வருகிறது. அதேபோல், நகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் தெரு விளக்குகள் இல்லாமல் இருட்டாக இருப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் நடமாட்டம் இருக்கிறது.
இதைத் தவிர்க்க அப்பகுதிகளில் உடனடியாக தெருவிளக்குகளை அமைத்துக் கொடுக்க வேண்டும். கச்சேரி சாலையில் பழைய பஸ் நிலையம் திரும்புகிற இடத்தில் உள்ள நகராட்சி நூலகத்தில் பழமை வாய்ந்த புத்தகங்கள் உள்ளதால், அதனை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று தெரிவித்தனர்.
கச்சேரி சாலையில் பஜார் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதி நெருக்கடியாக உள்ளது. இச்சாலையின் இரு பகுதியையும் வர்த்தக நிறுவனம் மற்றும் கடைகள் நடத்துகின்றவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் பஸ்களை இந்த வழியாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு நகராட்சி தலைவர் மா. சாந்தி பதிலளித்து பேசுகையில், விரிவாக்கப் பகுதிகளில் தெரு விளக்குகள் அமைக்கப்படும். பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் மார்ச் மாதத்துக்குள் நிறைவு பெற்றுவிடும். நூலகத்துக்கு பணியாளர் இல்லாததால் மூடி கிடக்கிறது. இதை மீண்டும் செயல்படுத்துவதற்கு முயற்சி செய்யப்படும். நகராட்சியில் மக்கள்தொகை பெருகி வருவதால் அதற்கேற்ப குடிநீர் வழங்குவதற்கு மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், கூடுதலாக மானூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுவரையில் பாதாளச் சாக்கடை வேலைகள் முடிந்த சாலைகளில் மராமத்து பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். நகராட்சி துணைத் தலைவர் எஸ். மாரியப்பன் நன்றி கூறினார்.