தினகரன் 28.06.2010
குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த கூடுதல் அபராத தொகையால் கேடிசி நகர் மக்கள் திண்டாட்டம்
நெல்லை, ஜூன் 28: பாளை கேடிசி நகரில் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த கூடுதல் அபராத தொகை வசூலிப்பதால் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நெல்லை மாநகராட்சியில் கேடிசி நகர் குடிநீர் திட்டத்தில் நடந்த முறைகேடு காரணமாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். 2006 முதல் இத்திட்டத்தில் புதிதாக இணைப்பு பெற்ற பலர், ஆயிரக்கணக்கான ரூபாயை செலவழித்து ஏமாந்தனர். இத்திட்டத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி, முறையற்ற குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். இதில் பாதிக்கப்பட்ட குடியிருப்புதாரர்கள், தங்கள் குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதன் அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சிகளில் அனுமதியற்ற வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு இருமடங்கு வைப்புத்தொகை வசூலித்து அவற்றை முறைப்படுத்த அரசு உத்தரவிட்டது. இந்த அரசாணையின் பேரில், கேடிசி நகரிலும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட நபர்கள் கூடுதல் வைப்புத்தொகை செலுத்தி மீண்டும் இணைப்புகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக வி.எம்.சத்திரம், கேடிசி நகர், சீனிவாசக நகர், கவிதா நகர், இம்மானுவேல் காலனி உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் வீடு,வீடாக கட்ட வேண்டிய தொகை குறித்த நோட்டீஸ்களை அளித்தனர். இந்த அபராத தொகை மற்றும் முறைப்படுத்துதல் கட்டணம் அதிகமாக இருப்பதால், பல பொதுமக்கள் தற்போது செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
இந்நிலையில் இன்று மாலைக்குள் கட்டணத்தை செலுத்தாவிடில், காவல்துறை மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் வீடு, வீடாக சென்று கூறி வருவதால், சிலர் பணத்தை திரட்ட முடியாமல் திண்டாடுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “2007ம் ஆண்டு முதல் கேடிசி நகர் பகுதியில் புதிய குடிநீர் இணைப்பு பெற்ற அனைவருமே தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர். புதிய இணைப்புக்கு நாங்கள் டெப்பாசிட் கட்டணமாக 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5025 செலுத்தினோம். இன்னும் ஒரு வார காலத்திற்குள் பணிநியமன ஆணை (ஒர்க் ஆர்டர்) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால், நாங்கள் பிளம்பர்கள் மூலம் குழிதோண்டி இணைப்பு பெற்றோம்.
இதற்கு சுமார் ரூ. 2 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டியதிருந்தது. இப்போது மாநகராட்சி அதிகாரிகள் அபராத கட்டணமாக ரூ. 13,500 செலுத்த வேண்டும் என தெரிவிக்கின்றனர். கிட்டதிட்ட வீட்டு குடிநீர் இணைப்புக்காக நாங்கள் ரூ.20 ஆயிரத்தையும் தாண்டி செலவழிக்க வேண்டியதுள்ளது. எனவே எங்கள் பகுதியில் உள்ள நகர்நல சங்கங்களை கூட்டி கோர்ட்டில் வழக்கு தொடர திட்டமிட்டு வருகிறோம்” என்றனர்.
கேடிசி நகர் குடிநீர் திட்டத்தில் முறைகேடு புகாரில் சிக்கிய இணைப்புதாரர்களுக்கு மட்டுமின்றி, பிற குடிநீர் இணைப்புதாரர்களுக்கும் அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. நாளை முதல் சட்ட நடவடிக்கை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தெளிவுபடுத்துமா மாநகராட்சி?
கேடிசி நகர் குடிநீர் இணைப்பு முறைகேடு தொடர்பான விபரங்களை மாநகராட்சி இன்றுவரை முறையாக வெளியிடவில்லை. முறைகேடாக பெற்ற குடிநீர் இணைப்புகள் எத்தனை, அவர்கள் செலுத்த வேண்டிய அபராத தொகை, சூப்பர்வைசிங் சார்ஜ் பில் வைத்திருப்பவர்களுக்கு உள்ள சலுகைகள் குறித்த விபரங்களை மாநகராட்சி தெளிவுபடுத்த முன்வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.