தினமலர் 14.08.2012
குடிநீர் பிரச்னையில் தொடர்ந்த சிக்கல் தீர்ந்ததால் : வீணாகும் தண்ணீரை நிறுத்த நடவடிக்கை அவசியம்
ஊட்டி : “ஊட்டியில் பரவலாக பெய்து வரும் மழையால், குடிநீர் வினியோகத்தில் சிக்கல் இருக்காது,’ என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஊட்டியில் மொத்தமுள்ள 36 வார்டு மக்களின் நீர் தேவையை நகரை சுற்றியுள்ள நீர்தேக்க அணைகள் பூர்த்தி செய்து வருகின்றன. தென் மேற்கு பருவ மழை ஏமாற்றியதால் கடந்த இரு மாதமாக அணைகளில் நீர்வரத்து குறைந்து கொண்டே வந்தது; சில அணைகள் தரை தட்டும் நிலைக்கு வந்தன; சில இடங்களில் நீர் வினியோகத்தில் தடங்கல் ஏற்பட்டது.பல இடங்களில் 10 நாள் இடைவெளியில் நீர் வினியோகம் செய்யப்பட்டது. பார்சன்ஸ் வேலி அணை மட்டுமே நீர் வினியோகத்திற்கு பெரும் துணையாக இருந்தது.
மழை வந்ததால் நிம்மதி:
ஊட்டியில் கடந்த சில நாளாக பரவலாக மழை பெய்து வருகிறது.”ஓஹோ’ என இல்லாவிட்டால் ஓரளவு மழை பெய்து வருவதால், நகரில் உள்ள அணைகளில் நீர்மட்டம் மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது.இதே போன்று இன்னும் சில தினங்கள் மழை பெய்தால், அணைகளின் நீர் மட்டம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,”பார்சன்ஸ் வேலி அணையில் தேவைக்கேற்ற நீர் உள்ளது.
நகர மக்களுக்கு தடையில்லா நீர் வினியோகம் செய்யும் அளவுக்கு அணைகளில் நீர் இருப்பு உள்ளது; இப்போதைக்கு நீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை,’ என்றனர்.
குழாய்களில் கசிவு:
குடிநீர் நீர் தேக்கங்களில் இருந்து குடிநீரை வினியோகம் செய்யும் குழாய்களின் பல இடங்களில் கசிவு ஏற்பட்டு, சாலைகளில் தண் ணீர் வீணாகி வருகிறது.வாகனங்களுக்கான நீரேற்று மையங்களிலும் குழாய்களில் தண்ணீர் விரயமாகி வருகிறது. இதேபோல, காமராஜ சாகர் உட்பட சில அணைகளில் கசிவு ஏற்படுவதாக, சில கவுன்சிலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.மழை அதிகரித்து அணை நிரம்பும் பட்சத்தில் அணையில் நிரம்பும் நீர் கசிந்து வீணாகும் என்பதால், அணையில் உள்ள கசிவுகளை அடைக்கவும், வீணாகும் தண்ணீரை நிறுத்தவும் நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.