குடிநீர் பிரச்னையை சமாளிக்க முன்னேற்பாடு
வேலூர், மாநகராட்சி 4-வது மண்டலத்தில் அடங்கிய வார்டுகளில் வரும் கோடையில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பழுதடைந்த ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக சீர்செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
மாநகராட்சி 4-வது மண்டலக்குழு (சேண்பாக்கம்) அலுவலகத்தில் அதன் தலைவர் ஐயப்பன் தலைமையில் வெள்ளிக்கிழமை கூட்டம் நடைபெற்றது. மண்டல அலுவலர் கண்ணன், மேற்பார்வையாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வார்டுகளில் பழுதடைந்துள்ள ஆழ்துளைக் கிணறுகளை சீர்செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பிரச்னை ஏற்படும் இடங்களில் போதுமான அளவில் வாகனங்களில் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.
மண்டலத்தில் அடங்கியுள்ள தெருக்களில் கழிவுநீர் தேங்கி, கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. ஒரு சில இடங்களில் குரங்கு தொல்லை அதிகரித்துள்ளது என்றும் உறுப்பினர்கள் குறை கூறினர்.