தினமலர் 26.04.2010
குடியிருப்புகளுக்கு அருகே திறந்தவெளி தகன எரிமேடை சுகாதார சீர்கேட்டை உருவாக்கும்: மக்கள் கவலை
புழல் : குடியிருப்புகளுக்கு அருகே சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும், திறந்தவெளி தகன எரிமேடை அமைப்பதை பேரூராட்சி நிர்வாகம் பரிசீலித்து, மாற்று நடவடிக்க எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் கோரி உள்ளனர்.சென்னை புழல் பேரூராட்சிக்குட் பட்ட காவங்கரையில், மகாத்மா காந்திஜி யாக்கோபு பிளாட் எனும் குடியிருப்பு உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை ஒட்டி சுடுகாடு அமைந் துள்ளது. சுடுகாட்டின் ஒரு பகுதியில் (காவாங்கரை பிரதான சாலையை ஒட்டிய பகுதியில்) எரிமேடை அமைக்கப்பட்டு பிணங்கள் எரிக்கப் பட்டு வந்தன. இந்நிலையில், அந்த எரிமேடை சேதமடைந்துள்ளதால், புதிய எரிமேடை கட்ட பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, சுடுகாட்டின் மற்றொரு பகுதியில் புதிய எரிமேடை கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதனால், அருகில் உள்ள மேற்கண்ட குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: ஏற்கனவே, குடியிருப்பு பகுதியில் இருந்து 150 அடி இடைவெளியில் இருக்கும் பழைய எரிமேடையில் பிணங்கள் எரிக்கும் போது, அதனால் ஏற்படும் ‘மாசு‘ சுகாதாரச் சீர்கேட்டை உருவாக்கி எங்களை மிகவும் பாதிக்கிறது. மேலும், பிணங்கள் எரிவதைக் காண நேரும் சிறுவர், சிறுமியருக்கும் பயத்தில் உடல் நலம் பாதிக்கிறது. அருகில் உள்ள தனியார் துவக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரும் இப்பிரச்னையால் அவதிப்படுகின்றனர். தற்போ து வீடுகளுக்கு அருகிலேயே புதிய எரிமேடை அமைக்கப்படுவதால், மேற்கண்ட பிரச்னைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு புகார் மனு அளித்துள்ளோம். எனவே எங்கள் கோரிக்கையை பரிசீலித்து பழைய இடத்திலேயே புதிய எரிமேடையை அமைத்து பிணங்கள் எரிக்கும் போது, சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தவிர்க்க, புழல் பேரூராட்சி நிர்வாகம் உரிய மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.