தினமணி 11.11.2010
குப்பைகளை சாலையில் கொட்டுவோர் மீது நடவடிக்கை: நகராட்சி ஆணையர்திருவாரூர், நவ. 10: திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குப்பைகளை சாலைகளில் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் க. சரவணன் எச்சரித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சில வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் குப்பைகள் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளிலும், சாலைகளிலும் கொட்டப்படுகின்றன. குறிப்பாக, பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவது, பல தொற்றுநோய்கள் ஏற்பட காரணமாகிறது. எனவே, வர்த்தக நிறுவனங்கள் தங்களது குப்பைகளை சேகரித்து, மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்து, தங்களது சொந்தப் பொறுப்பில் நகராட்சி துப்புரவு வாகனங்களில் ஒப்படைக்க வேண்டும். குப்பைகளை கழிவுநீர் வாய்க்காலில் கொட்டுவது தவிர்க்கப்பட வேண்டும். வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பாலிதீன் பைகள் விற்பது, வாங்குவதை தவிர்க்க வேண்டும். இதை மீறும் பட்சத்தில், திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி அபராதம் விதிக்கப்படுவதுடன், குப்பைகளை அகற்றுவதற்கான செலவும் வசூல் செய்யப்படும். மேலும், நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
எனவே, நகராட்சி பகுதிகளை தூய்மையாகப் பராமரிக்க வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்